எஸ்பிஐயின் பல லட்சம் வாடிக்கையாளர்களுக்கும், அதிருப்தியை கொடுக்கும் விதமாக ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளது.
அது எஸ்பிஐ கிரெடிட் கார்டை (SBI Credit Card) பயன்படுத்தினால், இனி உங்கள் பரிவர்த்தனைகளில் கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும் என்பது தான்.
ஆக இந்த கட்டணங்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு, அதன்பிறகு பயன்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது தான் உங்கள் பாக்கெட்டினை பதம் பார்க்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
நாளை முதல் கட்டணங்கள்
டிசம்பர் 1 முதல் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும், கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு செயல்பாட்டு கட்டணமும் (Processing fee),அதனுடன் வரியும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது 99 ரூபாய் செயல்பாட்டு கட்டணமும், அதனுடன் வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என எஸ்பிஐ கார்டு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எப்போதெல்லாம் கட்டணம்?
எஸ்பிஐ கிரெடிட் கார்டினை பயன்படுத்தி நேரடியாக ஷாப்பிங் செய்யும் போதும், ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போதும், ஆப்கள், இணையதளங்கள் மூலம் வாங்கும்போதும், நீங்கள் கிரெடிட் கார்டினை பயன்படுத்தி கட்டணம் செலுத்தினால், அதற்காக கட்ட வேண்டிய EMI தொகைக்கு செயல்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என எஸ்பிஐ கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இமெயில் விவரங்கள்
இது குறித்து எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், அனைத்து விவரங்களையும் இமெயிலில் முழுமையாக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் படி எல்லா EMI கட்டணங்களுக்கும் வட்டியுடன் சேர்த்து 99 ரூபாய் செயல்பாட்டு கட்டணமும், வரியும் செலுத்த வேண்டியிருக்கும். புதிய கட்டண நடைமுறைகளின் படி, டிசம்பர் 1-க்கு முன் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு, இந்த செயல்பாட்டு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் கொஞ்சம் கவனியுங்க
நீங்கள் செய்யும் பரிவர்த்தனை ரத்து செய்யப்பட்டால், செயல்பாட்டு கட்டணம் திரும்ப கிடைக்கும். எனினும் இதில் முன் கூட்டியே முடிக்கப்பட்டால் திரும்ப கிடைக்காது. மேலும் இவ்வாறு மாத தவணையாக மாற்றப்படும் பரிவர்த்தனைகளுக்கு வெகுமதி புள்ளிகள் கிடைக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இதனை கவனத்தில் கொண்டு எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் செயல்படுவது நல்லது.


Click it and Unblock the Notifications