இன்றைய சூழலில் ஒவ்வொருவரும் தங்களுடைய எதிர்காலத்திற்கும் தங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்கும் ஏதாவது ஒரு திட்டத்தில் சிறுக சிறுக சேமித்து வருகின்றனர். இதற்காக அரசு எண்ணற்ற திட்டங்களை வழங்குகிறது. ஒரு சில திட்டங்கள் போஸ்ட் ஆபீஸ்களில் கிடைக்கிறது. சில திட்டங்களை வங்கிகள் மூலமாகப் பெறலாம். இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா "ஹர் கர் லாக்பதி" (Har Ghar Lakhpati) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஹர் கர் லாக்பதி திட்டத்தில் உங்கள் குழந்தைகளின் கல்வி, திருமணம், வீடு வாங்குவது என உங்களுடைய நிதி இலக்குகளுக்காக சேமிக்கலாம். இந்தத் திட்டம் SBI வழங்கும் ஒரு ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டம் ஆகும். இதற்கு மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை சேமிக்க வேண்டும்.
யாரெல்லாம் கணக்கு தொடங்கலாம்?: ஹர் கர் லாக்பதி திட்டத்தில் தனி நபர்கள் கணக்கு தொடங்கலாம். கணவன் மனைவி இணைந்து கூட்டு கணக்கையும் தொடங்கலாம். 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகள் தங்கள் பெயரிலேயே கணக்கு தொடங்கி முதலீடு செய்யலாம். குழந்தைகளுக்காக அவர்களுடைய பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களும் கணக்கு தொடங்கலாம்.

இந்தத் திட்டத்தில் இணையும் விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் கால அளவு மற்றும் அவர் எந்த கேட்டகரியை சேர்ந்த விண்ணப்பதாரர் என்பதையெல்லாம் பொறுத்து வட்டி விகிதம் மாறுபடும். உதாரணமாக பொது வாடிக்கையாளர்களுக்கு 3 முதல் 4 ஆண்டுகளுக்கான RD திட்டத்திற்கு 6.55 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதுவே 5 முதல் 10 ஆண்டு வரையிலான RD திட்டத்தை தேர்ந்தெடுத்தால் அதற்கு 6.30 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
மூத்த குடிமக்களாக இருந்தால் 6.80 சதவீதம் முதல் 7.05 சதவீதம் வரை வட்டி பெறலாம். இதில் SBI வங்கியிலேயே வேலை பார்த்து ரிட்டயர் ஆகி இருந்தாலோ அல்லது வேலை பார்த்துக் கொண்டிருந்தாலோ அவர்களுக்கு இன்னும் சற்று கூடுதலான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
மாதம் 600 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம்?: ஒருவர் எஸ்பிஐ வழங்கும் RD திட்டத்தில் மாதா மாதம் ரூ.590 முதல் ரூ.610 வரை சேமிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். தோராயமாக தினமும் 20 ரூபாய் சேமித்தால் போதுமானது. இதன் மூலம் 10 ஆண்டுகள் கழித்து 1 லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்ளலாம். அதுவே 7 ஆண்டு RD திட்டத்தை தேர்ந்தெடுத்து சேமிக்கிறார் என்றால் மாதம் ரூ.850 முதல் ரூ.890 வரை சேமித்து முதிர்வில் 1 லட்சம் ரூபாயை பெறலாம்.
இன்னும் ஆண்டுகள் குறைவாக சேமிக்க நினைப்பவர்கள் ஐந்தாண்டு RD திட்டத்தையும் தேர்ந்தெடுக்கலாம். அப்படியானால் அதற்கு ரூ.1320 முதல் ரூ.1360 ரூபாய் வரை மாதா மாதம் சேமிக்க வேண்டும். 5 ஆண்டுகள் கழித்து 1 லட்சம் ரூபாய் கிடைக்கும். 3 ஆண்டு RD திட்டத்தை தேர்ந்தெடுத்தால் மாதம் ரூ.2480 முதல் ரூ.2520 வரை சேமிக்க வேண்டும். இப்படி சேமித்தால் 3 ஆண்டுகளின் முடிவில் 1 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இந்த வட்டி விகிதங்கள் அவ்வப்போது மாறக்கூடும் என்பதால் உங்களுடைய தவணை தொகையில் ஒரு சில மாறுபாடுகள் இருக்கலாம். இதை வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?: ஹர் கர் லாக்பதி திட்டத்திற்கு நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். SBI வாடிக்கையாளர்களாக இருந்தால் YONO ஆப் மூலம் டெபாசிட் பகுதிக்குச் சென்று e-RD என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். இப்படி வீட்டிலிருந்தும் ஒரு சில நிமிடங்களில் கணக்கு தொடங்கலாம்.
மாதம் ரூ.600 சேமிப்பது என்பது முடிந்தவரையில் எல்லோருக்கும் சாத்தியமான ஒன்றுதான். தினக்கூலிக்காரர்களும் இந்த திட்டத்தில் தொடர்ந்து சேமித்து ரூ.1 லட்சம் வரை வருமானம் பெற முடியும். அதற்கு தினமும் 20 ரூபாய் எடுத்து வைத்தாலே போதுமானது. இந்தத் தொகை ஒரு சிலருக்கு ஒரு நாளைய டீ செலவு அவ்வளவுதான். சிறிய தொகையும் காலப்போக்கில் எவ்வளவு பெரிய வருமானத்தை தருகிறது என்பதற்கு இதுவே உதாரணம்.


Click it and Unblock the Notifications
