இந்தியாவில் வாழும் கோடிக் கணக்கான மக்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற ஆசை / லட்சியம் / கனவு / வெறி... இருக்கும்.
அப்படித் தான் நம் சமூகம் நம்மை வளர்த்து இருக்கிறது. "சொந்த வீடு இல்லிங்களா" என்கிற கேள்வி நாம் பிறந்ததில் இருந்து சாகும் வரை நம்மை பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மாதம் 5,000 ரூபாய் கூட சேர்த்து வைக்க முடியாத நம்மால், எப்படி 50 லட்சத்துக்கு வீடு பார்க்க முடியும். ஆக நடுத்தர மக்களின் சொந்த வீட்டுக் கனவை நினைவாக்க ஒரே வழி வீட்டுக் கடன் தான்.
ரெப்போ வட்டி
இந்தியாவின் நம்பகமான வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தற்போது செம குறைவான வட்டி விகிதத்துக்கு வீட்டுக் கடன் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். மத்திய ரிசர்வ் வங்கி, கடந்த மார்ச் 27 அன்று 0.75 சதவிகிதம் தன் ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்தது.
வீட்டுக் கடன் வட்டி
ரெப்போ வட்டி விகிதங்களைக் குறைத்ததால், வீட்டுக் கடன் வட்டி விகிதங்களும் சரமாரியாக குறைந்து இருக்கின்றன. கீழே, யாருக்கு, எவ்வளவு தொகைக்கு, Floating rate-ல் என்ன வட்டி வசூலிப்பார்கள் என்கிற விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம். பார்த்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ரூ. 30 லட்சத்துக்குள்
எஸ்பிஐ வங்கியின் இ பி ஆர் (EBR - external benchmark based rate) 7.05 சதவிகிதமாக இருக்கிறது. அதோடு 0.15 சதவிகித வட்டியை பிரீமியம் என்கிற பெயரில் வைப்பார்களாம். ஆக மொத்தம் 7.05 + 0.15 = 7.20 சதவிகித வட்டிக்கு, 30 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் வாங்கலாம். இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ரூ. 30 - 75 லட்சம்
எஸ்பிஐ வங்கியின் இ பி ஆர் (EBR - external benchmark based rate) 7.05 சதவிகிதமாக இருக்கிறது. அதோடு 0.40 சதவிகித வட்டியை பிரீமியம் என்கிற பெயரில் வைப்பார்களாம். ஆக மொத்தம் 7.05 + 0.40 = 7.45 சதவிகித வட்டிக்கு, 30 - 75 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் வாங்கலாம். இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ரூ. 75 லட்சத்துக்கு மேல்
வங்கியின் இ பி ஆர் (EBR - external benchmark based rate) 7.05 சதவிகிதத்துடன் 0.50 சதவிகித வட்டியை பிரீமியம் என்கிற பெயரில் வைப்பார்களாம். ஆக மொத்தம் 7.05 + 0.50 = 7.55 சதவிகித வட்டிக்கு, 75 லட்சம் ரூபாய்க்கு மேல் வீட்டுக் கடன் வாங்கலாம். இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
சம்பளம் வாங்காதவர்கள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா
சம்பளம் வாங்காதவர்கள், இந்த எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கு, அவர்கள் வாங்கும் கடன் அளவு பொருத்து மேலே சொன்னது போல வட்டி விகிதங்களைக் கணக்கிடுவார்கள். அதோடு கூடுதலாக ஒரு 0.15 சதவிகிதம் வட்டி பிரீமியமாக வைப்பார்களாம். எனவே சம்பளம் வாங்குபவர்களை விட, சம்பளம் வாங்காதவர்கள் 0.15 % கூடுதலாக வட்டி செலுத்த வேண்டி இருக்கும்.
பெண் வாடிக்கையாளர்கள்
பெண்கள் இந்த வீட்டுக் கடன் வாங்கும் திட்டத்தில் கடன் வாங்க வந்தால், மேலே சொன்ன அனைத்து திட்டங்களில் இருந்தும் 0.05 சதவிகிதம் வட்டி குறைத்து கொடுக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம். ஆனால் இந்த வசதி ஜாயிண்ட் கணக்குகளுக்கு உண்டா எனத் தெளிவுபடுத்தவில்லை.


Click it and Unblock the Notifications