இந்தியா, அமெரிக்கா, தைவான் என உலகில் அனைத்து பங்குச்சந்தைகளும் பெரும் சரிவில் தத்தளித்து வரும் வேளையில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டைத் தேடி வரும் நிலையில் பங்குச்சந்தை சரிவு குறித்த அச்சம் இல்லாமல் எப்படி..? எதில் முதலீடு செய்யலாம்..? என்பதில் பலருக்கும் பல விதமான குழப்பம் உள்ளது.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் பங்குச்சந்தையால் பாதிப்பு ஏற்படாத அதேவேளையில் நிலையான வருமானத்தைப் பெற வேண்டும் என்பது தான் முக்கியமான இலக்காக இருக்க வேண்டும். இதேவேளையில் முதலீடு செய்யும் தொகைக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற அடிப்படையில் 3 திட்டங்கள் உள்ளது.

ஆர்பிஐ ப்ளோடிங் ரேட் பாண்ட்ஸ்
இந்திய அரசு வெளியிடும் பத்திரம் என்பதால், இதற்கு ரிஸ்க் என்பது ஜீரோ. இந்த பத்திரங்கள் NSC உடன் இணைக்கப்பட்டு உள்ளது. அதாவது மத்திய அரசு என்எஸ்சி-க்கு வட்டி விகிதம் + 0.35 சதவீத வட்டி வருமானத்தை ஆர்பிஐ ப்ளோடிங் ரேட் பாண்ட்ஸ்-க்கு இந்திய அரசு அளிக்கிறது.
ஆர்பிஐ ப்ளோடிங் ரேட் பாண்ட்ஸ்-க்கு டிசம்பர் 2020ல் 7.15 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் தற்போது 8.05 சதவீதமாக உயர்ந்துள்ளது. இப்பத்திர முதலீட்டுக்குக் கிடைக்கும் வட்டி வருமானம் ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறை அதாவது ஜனவரி, ஜூலை மாதத்தில் கிரெடிட் செய்யப்படுகிறது.
ஆனால் ஆர்பிஐ ப்ளோடிங் ரேட் பாண்ட்ஸ்-ல் இருக்கும் முக்கியமான பிரச்சனை 7 வருட முதிர்வு காலம், மூத்த குடிமக்களாக இருந்தால் 4 வருடத்தில் திருப்பி எடுத்துக்கொள்ள முடியும். இதில் கிடைக்கும் வருமானத்திற்கு வருமான வரி விதிப்பின் அடிப்படையில் வரி கழிக்கப்படும், இதேபோல் TDS பிடித்தம் செய்யப்படும்.
பொதுத்துறை வங்கிகள் 5 வருட வைப்பு நிதிக்கு அளிக்கும் 6.3 சதவீத வட்டி விகிதத்தைக் காட்டிலும் அதிகம், பாதுகாப்பு கொண்டது.
லிக்விட் மியூச்சுவல் பண்ட்ஸ்
ஆர்பிஐ ப்ளோடிங் ரேட் பாண்ட்ஸ் முதலீட்டில் இருந்த மிகப்பெரிய பிரச்சனை 7 வருட முதிர்வு காலம், ஆனால் லிக்விட் மியூச்சுவல் பண்ட்ஸ்-ல் இத்தகைய கட்டுப்பாடு ஏதுமில்லை. Liquid Mutual Funds என்பது டெபிட் மியூச்சுவல் பண்ட்-ன் துணை பிரிவாகும். குறுகிய முதிர்வு காலம் கொண்டது, இதேபோல் நிலையான வருமானம் தரக்கூடிய முதலீட்டுத் திட்டமாகும்.
இதில் ஒரு வருடத்திற்கு 6.38 சதவீதம், 2 வருடத்திற்கு 6.92 சதவீதம், 3 வருடம் சிஏஜிஆர் 7 சதவீதம் வரையில் வருமானம் கொடுக்கிறது. இதில் லாக்இன் கட்டப்பாடு இல்லை, இதேபோல் முதலீட்டை வெளியேற்ற வேண்டுமாயின் ஒரு நாளில் வங்கி கணக்கிற்கு வந்துவிடும். 7 நாளுக்கு பின்பு எக்சிட் லோடு ஜீரோ என்பதால் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் ஆக விளங்குகிறது.
இதில் முதலீடு செய்யப்படும் பணம் பெரும்பாலும் அரசு பத்திரம், வைப்பு நிதி போன்று நிலையான வருமானம் தரும் முதலீடுகளில் செய்யப்படுகிறது. செபியின் விதிமுறைப்படி underlying securities-க்கு அதிகப்படியாக 91 நாள் முதிர்வு காலம் கொண்டு இருக்கும் காரணத்தால் வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இருக்காது.
போஸ்ட் ஆபீஸ் மாத வருமான திட்டம்
தபால் நிலையத்தில் அளிக்கப்படும் இத்திட்டம் குறித்து எல்லோருக்கும் தெரியும் என்றாலும், பங்குச்சந்தை சரிவு குறித்த அச்சம் இல்லாத முதலீட்டில் போஸ்ட் ஆபீஸ் மாத வருமான திட்டம் மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது.
இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு ஒவ்வொரு மாதமும் 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல் இதில் 1000 ரூபாயில் இருந்து 15 லட்சம் வரையில் முதலீடு செய்ய முடியும். மேலும் இத்திட்டத்தில் லாக் இன் காலம் 5 வருடம்.
இந்த 3 திட்டங்களின் அடிப்படை அதிரடியான வளர்ச்சியோ, லாபத்தை அளிக்கும் கொடுக்கும் திட்டமோ இல்லை. கையில் இருக்கும் பணத்தில் இருந்து நிலையான வருமானம், இதேபோல் பதற்றம், அச்சம் கொடுக்காத முதலீட்டு திட்டம்.
இந்த ஏஐ,கிரிப்டோ அச்சத்தில் இருந்து விலகி மன நிம்மதி உடன் வருமானத்தை அளிக்கக்கூடிய திட்டங்களாக மட்டுமே இதை பார்க்க வேண்டும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Tamil.Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications