ஒருவர் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை சரியான திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இல்லை என்றால் இனிவரும் காலங்களில் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பணவீக்கத்தை சமாளிக்க முடியாமல் போகலாம். ஏற்கனவே செலவுகள் அதிகமாக இருக்கும் காரணத்தினால் பலரும் சேமிப்பையே மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதேபோல் பங்குச்சந்தை போன்ற ரிஸ்க் கொண்ட முதலீட்டு திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் சிலர் பயப்படுகின்றனர். இப்படி இருக்கையில் பாதுகாப்பான முதலீடாக நீண்ட காலமாக மக்களுக்கு வருமானத்தை வழங்கி வரும் திட்டம் பிக்சட் டெபாசிட் (FD).

உங்களிடம் தற்போது ரூ.10 லட்சம் பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதை ஒரே பிக்சட் டெபாசிட்டாக செய்தால் லாபம் அதிகமா? அல்லது ஒவ்வொரு லட்சமாக பிரித்து டெபாசிட் செய்தால் லாபம் அதிகமா? என்பது குறித்து தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
முதலீடு: நீங்கள் ரூ.10 லட்சத்தை ஒன்றாக ஒரே பிக்சட் டெபாசிட் திட்டத்தில் போடுகிறீர்கள். இதற்கான முதிர்வு காலம் 10 ஆண்டுகள் என வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு ஆண்டும் இதற்கு 7 சதவீதம் வட்டி கிடைத்தால், மொத்தமாக வட்டி மட்டும் ரூ. 9.67 லட்சம் கிடைக்கும். ஆக மொத்த முதிர்வுத் தொகையாக ரூ. 19.67 லட்சத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
சரி மொத்தமாக முதலீடு செய்தால் கிட்டத்தட்ட டெபாசிட் செய்த அளவு வட்டி கிடைக்கிறது. அப்படியானால் ரூ.10 லட்சத்தை பிரித்து ஒவ்வொரு லட்சமாக முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? பிரித்து பிரித்து நீங்கள் முதலீடு செய்தாலும் கிட்டத்தட்ட உங்கள் கையில் கிடைக்கப் போகும் வட்டி தொகை என்னவோ அதே ரூ.19.67 லட்சம் தான். மொத்த முதலீட்டுக்கும் பிரித்து முதலீடு செய்வதற்கும் ஒரே வட்டி தான் கிடைக்கிறது.. அப்படியானால் ஏன் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்? அங்க தான் விஷயமே இருக்கு.
ஒரே பிக்சட் டெபாசிட்டில் போடுவதால் என்ன லாபம்?: மொத்தமாக டெபாசிட் செய்யும்போது உங்கள் பணத்தை ஒரே ஒரு அக்கவுண்டில் இருந்து நீங்கள் டெபாசிட் செய்வீர்கள். அப்படி செய்யும்போது முதிர்வு தேதி வரும் வரையில் நீங்கள் அடிக்கடி வங்கிக்கு போகத் தேவையில்லை. அந்தந்த வங்கியின் மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவே எளிதில் உங்கள் பணத்தின் வட்டியை கண்காணிக்கலாம்.
ஒரே FD-யில் டெபாசிட் செய்வதானால் இருக்கும் நன்மையைப் பார்த்தோம். இதில் ஒரு சிக்கலும் உள்ளது. அது என்னவென்றால் உங்களுக்கு திடீரென எதிர்பாராத செலவு ஏற்பட்டாலோ அல்லது உங்கள் வீட்டு விசேஷத்திற்கு பணம் தேவைப்பட்டாலோ நீங்கள் எளிதில் பணம் எடுக்க முடியாது. உங்களுடைய ரூ.10 லட்சம் பணத்தை 10 வருடங்களுக்கு நீங்கள் பிக்சட் டெபாசிட் செய்திருந்தால் 10 ஆண்டுகள் முடியும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். அதற்குள் உங்களுக்கு பணம் தேவைப்படுகிறது என்றால் உங்களால் எடுக்க முடியாது. அப்படியே எடுத்தாலும் அதற்கு வங்கிகள் அபராதம் விதிக்கும்.
நீங்கள் பணத்தை டெபாசிட் செய்த வங்கி ஏதேனும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டு திவாலாகும் நிலைக்குச் சென்றால், அப்போது டிஐசிஜிசி விதிகளின்படி அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையில் மட்டுமே இன்சூரன்ஸ் பெற முடியும். இதுவும் இதில் இருக்கும் மற்றொரு சிக்கல்.
பிரித்துப் பிரித்து முதலீடு செய்வதால் என்ன பயன்?: உங்களிடம் இருக்கும் ரூ. 10 லட்சம் பணத்தைப் பிரித்து பிரித்து வெவ்வேறு பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ரூ. 10 லட்சம் மொத்த முதலீட்டுக்கு எப்படி வட்டி கிடைக்கிறதோ? அதேபோல வெவ்வேறு FD-களில் போட்ட பணத்திற்கும் வட்டி சேர்ந்து கொண்டே இருக்கும். நீங்கள் ஏதேனும் அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டாலும் ஒரு FD-யில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். மீதமுள்ள ரூ.9 லட்சத்திற்கு எந்த வித அபராதமும் செலுத்தத் தேவையில்லை. ஆனால் 10 வெவ்வேறு பிக்சட் டெபாசிட் செய்யும்போது நீங்கள் 10 கணக்குகளையும் தனித்தனியாக நிர்வகிக்க வேண்டும்.
10 FD திட்டங்களும் எப்போது முதிர்வு பெறுகிறது என்ற தேதியையும் நினைவில் வைத்திருக்க வேண்டும். உங்களிடம் நிறைய பணம் இருக்கிறது. இடையில் டெபாசிட் செய்த பணத்தில் நீங்கள் கை வைக்கவே மாட்டீர்கள் என்றால் தாராளமாக நீங்கள் மொத்தமாக டெபாசிட் செய்யலாம். அதுவே எனக்கு பணம் தேவைப்படும்.. திடீரென செலவுகள் ஏற்பட்டால் அந்த பணத்தைத் தவிர வேறு வழி இல்லை என்று நினைப்பவர்கள் பிரித்து பிரித்து முதலீடு செய்யலாம். எனவே உங்கள் தேவை என்ன? எதிர்காலச் செலவுகள் எப்படி இருக்கும் என்பதையெல்லாம் பொறுத்து முதலீடு செய்ய வேண்டும். தெளிவான திட்டமிடல் இருந்தால் உங்களுடைய சேமிப்புக்கு சரியான வருமானம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications