மாத சம்பளம் மட்டும் வாங்கினால் போதாது எதிர்கால தேவைக்கும் இப்போது முதலே பணத்தை முதலீடு செய்துவிட வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகமாகி வருகிறது. தற்போது பெரும்பாலான மக்களின் சராசரி சம்பளம் 50,000 ரூபாய் என வைத்து கொள்வோம்.
மாதம் 50,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு நபர் எவ்வளவு பணத்தை முதலீடு செய்ய முடியும், எவ்வளவு பணத்தை செலவு செய்ய முடியும் என்பதற்கான கணக்கீட்டை எளிய நிதி விதியை கொண்டு நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம். உலக அளவில் முதலீட்டு நிபுணர்கள் பின்பற்றும் ஒரு எளிய ஃபார்முலா தான் 50:30:20. அதாவது 50,000 ரூபாய் சம்பளத்தை இந்த விதியின்படி பிரிக்க வேண்டும்.

இந்த விதியின் படி மாதம் 50,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு நபர் தன்னுடைய சம்பளத்தை பின்வருமாறு பிரிக்க வேண்டும்.
50% (தேவைகள் - Needs): 25,000 ரூபாயை உங்களின் அத்தியாவசியத் தேவைகளான வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள், இஎம்ஐ (EMI), பிள்ளைகளின் பள்ளி கட்டணம் மற்றும் பில்கள் கட்ட பயன்படுத்த வேண்டும்.
30% (விருப்பங்கள் - Wants): 15,000 ரூபாயை பொழுதுபோக்கு, வெளி இடங்களுக்குச் சென்று சாப்பிடுவது, சினிமா, ஷாப்பிங் மற்றும் சுற்றுலா போன்ற தனிப்பட்ட விருப்பங்களுக்குச் செலவிடலாம்.
20% (சேமிப்பு & முதலீடு - Savings): மீதமுள்ள 10,000 ரூபாயை கண்டிப்பாகச் சேமிப்பு மற்றும் முதலீட்டிற்கு ஒதுக்க வேண்டும்.
இந்த விதியின்படி, 50,000 ரூபாய் சம்பளம் வாங்குபவர் மாதம் தோறும் 10,000 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும், இந்த பணத்தை அவர் SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். நீங்கள் மாதம் 10,000 ரூபாய் தொகையைச் தொடர்ந்து முதலீடு செய்து, அதற்கு சராசரியாக 12% வருடாந்திர லாபம் கிடைப்பதாக வைத்துக் கொண்டால், கூட்டு வட்டி (Compounding) மூலம் உங்களின் பணம் பல மடங்கு உயரும். அதாவது 10 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்த தொகை 12 லட்சம். ஆனால், அதன் மொத்த மதிப்பு தோராயமாக 23.23 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும்.
இதுவே 20 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்த தொகை 24 லட்சம் ரூபாய். கூட்டு வட்டியின் அபார சக்தியால் அதன் மொத்த மதிப்பு தோராயமாக 94 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும். ஒருவேளை குடும்பச் சூழ்நிலை காரணமாக உங்களால் ஆரம்பத்திலேயே 10,000 ரூபாய் முதலீடு செய்ய முடியாவிட்டால் கவலைப்படத் தேவையில்லை. ஆரம்பத்தில் மாதம் 5,000 ரூபாய் என உங்களால் முடிந்த தொகையில் முதலீட்டைத் தொடங்கலாம். ஒவ்வொரு வருடமும் உங்களின் சம்பளம் உயரும் போது, முதலீட்டுத் தொகையையும் 10% வரை அதிகமாக்கிக் கொண்டே போகலாம்.
இவ்வாறு முதலீடு செய்யத் தொடங்கும் முன், உங்களின் 6 மாதச் செலவிற்கான தொகையை அதாவது 2 லட்சம் ரூபாய் வரை அவசரத் தேவைக்காக வங்கிக் கணக்கில் தனியாகச் சேமித்து வைக்க வேண்டும். இது அவசர நிதி தேவைக்கு பயன்படும். இல்லை என்றால் இடையில் நீங்கள் முதலீட்டை நிறுத்தும் வாய்ப்பு ஏற்படும். அதே போல மருத்துவ காப்பீடு மற்றும் டெர்ம் இன்சூரன்ஸ் எடுத்து வைத்துக் கொள்வது பாதுகாப்பானது என்கின்றனர் நிபுணர்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

