சென்னை: மியூச்சுவல் ஃபண்ட் என்று அழைக்கப்படும் பரஸ்பர முதலீட்டு திட்டங்களில் தற்போது பலரும் ஆர்வத்தோடு முதலீடு செய்து வருகின்றனர். மக்களிடையே முதலீடு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால் முதலீட்டுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் பொருட்டு பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் தங்களுடைய எஸ்ஐபி முறையிலான திட்டங்களில் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் அண்மையில் கூட எல்ஐசி நிறுவனம் தங்களுடைய எஸ்ஐபி திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம் என அறிவித்துள்ளது. பல்வேறு முதலீட்டு ஆலோசகர்களும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் முதலீடு குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால் பலரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய முன் வருகின்றனர். ஆனால் மாதம் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் முதலீடு செய்ய வேண்டும் என்பதால் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு இது எட்டாக்கனியாக இருக்கிறது.

ஆனால் 100 ரூபாய் முதலே எஸ்ஐபி முதலீடு செய்யலாம் என்ற அறிவிப்பின் மூலம் இன்னும் ஏராளமானவர்கள் குறிப்பாக குறைந்த ஊதியம் பெரும் நபர்கள் கூட மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகளை நோக்கி வரத் தொடங்குவார்கள் என கூறுகிறார்கள் முதலீட்டு ஆலோசகர்கள் . இது போல எஸ்ஐபி தொகையை குறைப்பதன் மூலம் சிறு முதலீட்டாளர்கள் குறிப்பாக முதல் முறையாக முதலீட்டை நோக்கி வரக்கூடிய நபர்கள் நிதி சந்தைக்குள் நம்பிக்கையுடன் நுழைவார்கள் என கூறுகின்றனர்.
குறைந்த ஊதியம் வாங்க கூடியவர்கள் மற்றும் ஊரகப் பகுதிகளை சேர்ந்தவர்களும் முதலீடு செய்ய ஆசை இருந்தாலும் போதிய தொகை இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு 100 ரூபாய் முதலே முதலீடு செய்யலாம் என்ற அறிவிப்பு மிகச் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது என்கின்றனர்.
குறிப்பாக மாணவர்கள் ,முதன்முறையாக வேலைக்கு சென்று இருப்பவர்கள் தங்களுடைய முதலீட்டு பயணத்தை இதன் மூலம் தொடங்க முடியும் என கூறுகின்றனர். இது சேமிப்பு என்ற ஒரு பழக்கத்தையும் காம்பவுண்டிங் சக்தி குறித்து மக்கள் அறிந்து கொள்ளவும் உதவும் என முதலீட்டு துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். முதலீடு செய்வது குறைந்த தொகையாக இருந்தால் கூட அதனை தொடர்ந்து செய்யும்போது பின்னாளில் அது பெரும் செல்வமாக உருவாகும் என்பதையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
100 ரூபாய் முதலே முதலீடு என்ற வாய்ப்பு ஏராளமானவர்கள் தொடர்ச்சியாக நீண்ட காலம் தங்களுடைய முதலீட்டை மேற்கொள்ள வழிவகுக்கும். மியுச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகள் அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு மட்டுமே என்ற நிலை மாறி அனைவரும் அணுகும் தன்மை கொண்டவை என்ற நிலையை எட்ட இது உதவும்.


Click it and Unblock the Notifications