பாதுகாப்பான முதலீடு என்ற உடன் அனைவரும் போட்டிப்போட்டுச் சொல்லும் ஒரு ஆப்ஷன் பிக்சட் டெபாசிட். ஆனால் இதில் இருக்கும் வருமான வரி தொடர்பான பிரச்சனையை யாரும் கண்டுகொள்வதே இல்லை. வைப்பு நிதியில் கிடைக்கும் வருமானத்திற்கு வருமான வரி விதிக்கப்படுவதால் உங்களுக்கான வருமானம் என்பது சொற்ப அளவிலேயே கிடைக்கிறது.
உதாரணமாக அருண், வருண் என இரண்டு பேர் தலா 10 லட்சத்தை 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். இதில் அருண் ஃபிக்ஸட் டெபாசிட்டிலும், வருண் ஊழியர் வருங்கால வைப்பு நிதியான EPF-லும் முதலீடு செய்கிறார்.

வங்கி வைப்பு நிதியில் 6.45 சதவீத வட்டி வருமானம் கிடைக்கும், இதுவே ஈபிஎப் எனில் 8.25 சதவீதம் வட்டி வருமானம் கிடைக்கும். இதன் மூலம் 10 வருடத்திற்குப் பின் EPF-ல் முதலீடு செய்தவர்களுக்கு சுமார் ரூ.22.1 லட்சமும், வைப்பு நிதியில் முதலீடு செய்தவருக்கு சுமார் ரூ.15.4 லட்சம் கிடைக்கும்.
ஆனால் இதில் எங்கு வித்தியாசம் என்றால் EPF, PPF போன்றவற்றில் முதலீடு செய்யும் போது அதில் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வரி விலக்கு கிடைக்கும். வைப்பு நிதியில் கிடைக்கும் வட்டிக்கு முதலீட்டாளரின் வருமான வரி விகிதத்தின்படி வரி விதிக்கப்படும்.
உதாரணமாக 30% வருமான வரி வரம்பில் இருப்பவர்களுக்கு, செஸ் உட்பட வரியைக் கணக்கிட்டால் வைப்பு நிதியில் முதலீடு செய்பவருக்கு 4.44% அளவிலான வட்டி வருமானம் மட்டுமே இறுதியாகக் கிடைக்கும். ஈபிஎப் மற்றும் வைப்பு நிதிக்கான வட்டி விகித வித்தியாசம் கிட்டத்தட்ட 4 சதவீதம், இது நாட்டின் கடந்த 10 ஆண்டு சராசரி பணவீக்க அளவை காட்டிலும் குறைவு.
அப்படி என்றால் வைப்பு நிதியில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டுமா என்ற கேள்வி எழும்..? இதற்கான பதில், எதற்காக வைப்பு நிதியில் முதலீடு செய்ய வேண்டும் என்பதில் இருந்து தான் கிடைக்கும். ஈபிஎப் - வைப்பு நிதி இரண்டுமே பாதுகாப்பானவை என்பதால் இரண்டுக்கும் இருக்கும் முக்கிய வித்தியாசம் லாக் இன் காலம் மற்றும் எளிதாகவும், விரும்பிய நேரத்தில் பணத்தை வித்டிரா செய்துகொள்ள முடியும் வசதி தான்.
எனவே உங்களுக்கு அவசர நிதி தேவை இல்லாத பட்சத்திலும், மாத சம்பளக்காரர்கள் வருமான வரி சேமிக்க 2.5 லட்சம் வரையில் வரம்புக்கு ஈபிஎம், பிபிஎப், விபிஎப், வாயிலாக முதலீடு செய்த பின்பு எஞ்சியுள்ள தொகையை வைப்பு நிதியாகச் சேமிக்கலாம்.
இதன் மூலம் கூடுதல் வருமானமும் கிடைக்கும், வருமான வரிச் சலுகை + நீண்ட காலத்தில் கூடுதல் தொகையும் கிடைக்கும். இறுதியாக அவசர நிதியுதவிக்காகச் சிறிய அளவிலான தொகையை வைப்பு நிதியாக முதலீடு செய்யலாம்.


Click it and Unblock the Notifications