தபால் அலுவலகங்களில் சாமானியர்களுக்கு உதவும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் வழங்கப்படுகிறது. அதில் பெண் குழந்தைகளுக்காகவே பிரத்தியேகமாக வழங்கப்படும் ஒரு திட்டம்தான் சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம். இது ஒரு சிறு சேமிப்பு திட்டமாகும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உத்தரவாதமான வருமானத்தைப் பெற முடியும்.
இந்த பதிவில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் ரூ, 5000 டெபாசிட் செய்து வந்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்பது குறித்து பார்ப்போம். இந்த திட்டத்தில் ஏற்கனவே பல பெற்றோர்கள் சேமிக்கத் தொடங்கியுள்ளனர்.

முதலீடு: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சமாக 250 ரூபாய் முதல் கணக்கு தொடங்க முடியும். அதிகபட்சமாக 1 வருடத்திற்கு ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
முதிர்வு காலம்: செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள். ஆனால் நீங்கள் தொடர்ந்து 15 ஆண்டுகள் மட்டும் முதலீடு செய்தால் போதுமானது. மீதமுள்ள 6 ஆண்டுகளுக்கு எந்தவித முதலீடும் இல்லாமல் வட்டி வருமானம் வழங்கப்படும். 21 ஆண்டுகள் கழித்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். எளிமையாக சொல்லப்போனால் உங்களுக்கு குழந்தை பிறந்த உடனே சேமிக்க தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் குழந்தைக்கு 21 வயது ஆகும்போது வட்டியையும், அசலையும் சேர்த்து எடுத்துக் கொள்ள முடியும்.
மாதம் ரூ. 5,000 சேமித்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?: மாதம் 5000 ரூபாய் என்ற வீதத்தில் சேமிக்க தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். தற்போது செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு 8.2 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. சிறு சேமிப்பு திட்டங்களிலேயே அதிக வட்டி விகிதம் வழங்கப்படும் ஒரு திட்டம் என்றால் அது இந்த திட்டம்தான்.
மாதம் ரூ.5,000 என்றால் வருடத்திற்கு ரூ. 60,000 சேமித்திருப்பீர்கள். தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு இந்த 60,000-த்தை செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் 15 ஆண்டுகளுக்கு ரூ.9,00,000 முதலீடு செய்திருப்பார்கள். இதற்கு வருடா வருடம் வட்டி வருமானம் வழங்கப்படும். 21 ஆண்டுகள் கழித்து 18,71,031 ரூபாய் வட்டி மட்டும் கிடைத்திருக்கும். அப்படியானால் வட்டியும் அசலையும் சேர்த்து 27,71,031 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.
ஒருவர் அதிகபட்ச தொகையான ரூ. 1.50 லட்சத்தை தொடர்ந்து முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் 15 வருடங்கள் கழித்து 22,50,000 ரூபாயை முதலீடு செய்திருப்பார் இதற்கு வட்டி வருமானமாக 46,77,578 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் வட்டியும் அசலையும் சேர்த்து 69,27,578 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications