ஒவ்வொரு இந்தியப் பெற்றோரும் குழந்தை பிறந்துவிட்டால், அந்த குழந்தையின் கல்வி, எதிர்காலம் மற்றும் திருமணம் போன்றவற்றை கருத்தில் கொண்டு சேமிக்கத் தொடங்கிவிடுவார்கள். இதற்கு மத்திய அரசு ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கென பிரத்தியேகத் திட்டங்களை வழங்குகிறது. அப்படி பெண் குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் தான் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்று சொல்லப்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் ஏராளமான பெற்றோர்கள் முதலீடு செய்து வருகின்றனர். பிற திட்டங்களைக் காட்டிலும் செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு அதிக வட்டி, வருமான வரி விலக்கு போன்ற பல நன்மைகள் வழங்கப்படுகிறது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் முதன்மை தேர்வாக SSY திட்டத்தையே கருதுகின்றனர். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் சுமார் 21 ஆண்டுகள். ஆனால் இடையில் அவசர செலவுகள் ஏற்பட்டால் என்ன செய்வது? அதற்கு அரசாங்கம் விதித்துள்ள நிபந்தனைகள் என்ன? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
எப்போது பணம் எடுக்கலாம்?: செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள். ஆனால் முதல் 15 ஆண்டுகளுக்கு மட்டும் முதலீடு செய்தால் போதும். ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரையில் டெபாசிட் செய்யலாம். ஆனால் குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் வரை கணக்கிலிருந்து ஒரு பைசா கூட எடுக்க முடியாது.

18 வயதைக் கடந்து விட்டால் உயர்கல்விச் செலவு மற்றும் இதர விஷயங்களுக்காக பகுதியளவு பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளலாம். அதாவது டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் தொகையில் 50 சதவீதம் வரை எடுக்கலாம். நீங்கள் பணம் கேட்கும் வருடத்திற்கு முந்தைய வருடம் கணக்கில் எவ்வளவு பணம் இருந்ததோ? அதில் 50 சதவீதத்தை எடுத்துக் கொள்ளலாம். இதை மொத்தமாகவும் வாங்கிக் கொள்ளலாம் அல்லது இன்ஸ்டால்மென்ட் மூலமாவும் வாங்கிக் கொள்ளலாம்.
மேலும் SSY திட்டத்தில் போடப்படும் பணம் உங்களின் மகள் கல்லூரியில் சேர்வதற்கான கல்வி கட்டணமாக பயன்படுத்தப்படலாம். அதற்கு கல்லூரி சார்பாக அட்மிஷன் லெட்டர், பீஸ் ரெசிப்ட் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
21 ஆண்டுகளுக்கு முன்பு கணக்கை முடிப்பதற்கு கீழ்காணும் மூன்று விஷயங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு வேலை உங்கள் மகளுக்கு 18 வயதைக் கடந்தவுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டால் SSY திட்டத்தில் இருக்கும் பணத்தை முழுமையாக எடுத்துக் கொள்ளலாம். திருமணம் நிச்சயிக்கப்பட்ட தினத்தில் இருந்து 3 மாதங்களுக்குள் உரிய சான்றுகளை சமர்ப்பித்தால் மொத்த பணமும் வட்டியுடன் கிடைக்கும்.
துரதிஷ்டவசமாக கணக்கு வைத்திருக்கும் பெண் குழந்தை இறக்க நேரிட்டால் ,கணக்கை உடனடியாக மூடி வட்டியும் அசலும் சேர்த்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும். அதேபோல குடும்பத்தில் யாருக்காவது நோய் ஏற்பட்டு, வருடா வருடம் செய்யக்கூடிய பங்களிப்பை தொடர முடியாமல் போனால் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கணக்கை முடித்துக் கொள்ளலாம்.
பணம் எடுப்பது எப்படி?: இது போன்ற சூழ்நிலையில் நீங்கள் எங்கு செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை திறந்தீர்களோ? அங்கு நேரடியாக செல்ல வேண்டும். SSY மூலம் பணம் எடுப்பதற்கான படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அதன் பின்னர் உங்கள் மகளுடைய வயது, அட்மிஷன் லெட்டர் மற்றும் இதர விஷயங்களை சமர்ப்பிக்க வேண்டும், அலுவலகங்களில் இருக்கும் ஊழியர்கள் உங்களுடைய ஆவணங்களை சரிபார்த்துவிட்டு வங்கி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வார்கள்.
நிதி நிபுணர்கள் மகளின் எதிர்கால செலவுகள் அனைத்திற்கும் இந்த ஒரு திட்டத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் நீண்ட கால லாக்கின் காலம் இருப்பதால் அவசரத்திற்கு பணம் எடுப்பதில் சிக்கல் ஏற்படலாம். எனவே குறுகிய கால தேவைகள் மற்றும் அவசரகால நிதி தேவைகளுக்கு உதவக்கூடிய பிற திட்டங்களை கருத்தில் கொள்ளலாம். அப்படி செய்யும்போது செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் போடப்படும் பணம் பத்திரமாக இருக்கும். அதை உங்கள் மகளின் முக்கியமான தேவைகளை நிறைவேற்ற பயன்படுத்திக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications