செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று சொல்லப்படுகிற சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் (SSY) 2015-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சிறுசேமிப்பு திட்டமாகும் தங்கள் மகள்களின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யும் பெற்றோருக்கு சிறந்த வருமானத்தை SSY திட்டம் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள பெண் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் நிதி தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் SSY திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் வட்டி விகிதங்கள் காலாண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும்.
SSY திட்டம் மட்டும் இன்றி பல சிறு சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதங்களையும் இந்திய அரசாங்கம் காலாண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கும். அதன்படி ஜூலை 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்திற்கு SSY திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த விகிதம் நாட்டில் உள்ள பிற சிறுசேமிப்பு திட்டங்களை விட மிக அதிகமான வட்டி விகிதமாகும்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் மாதம்தோறும் 10,000 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம். ஒரு பெற்றோர் தங்களின் 5 வயது மகளுக்கு சேமிக்கத் தொடங்குகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். 10,000 ரூபாய் முதலீடு செய்தால் வருடத்திற்கு 1.2 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டி இருக்கும்.
அப்படியானால் 15 வருடங்களுக்கு தொடர்ந்து முதலீடு செய்யும்போது ரூ.18 லட்சம் ரூபாயை மொத்தமாக முதலீடு செய்திருப்பீர்கள். இந்த மொத்த முதலீட்டு காலத்திற்கும் 8.2 சதவீதம் என்ற வட்டி விகிதம் வழங்கப்பட்டால் 37,42,062 ரூபாய் வட்டியாக வழங்கப்படும். சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள்.
ஆனால் 21 ஆண்டுகளுக்கும் நீங்கள் முதலீடு செய்ய வேண்டுமா? என்று கேட்டால் அப்படி கிடையாது. தொடர்ந்து 15 ஆண்டுகள் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். அதன் பிறகு உள்ள 6 ஆண்டுகளுக்கு நீங்கள் முதலீடு செய்யாமலேயே உங்களுக்கு கூட்டு வட்டி முறையில் வட்டி அளிக்கப்படும். அப்படியானால் மொத்த முதிர்வு தொகையாக நீங்கள் 55,42,062 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கு வரி சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரி சலுகைகள் கிடைக்கும். SSY திட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் பிரிவு 80சி-யின் கீழ் வரி விலக்குகளை பெற தகுதியுடையவை. வருமானவரிச் சட்டத்தின் 10-வது பிரிவின் கீழ் SSY கணக்கின் கீழ் திரட்டப்படும் வட்டிக்கு அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
SSY திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று அதன் நீண்ட கால சேமிப்பு. 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும் இந்தத் திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் பாதுகாப்பான அதே வேளையில் அதிக வருமானத்தை வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்திற்கு என்று சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. அதன்படி சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் பிற திட்டங்களைப் போல கடன்களை வாங்க முடியாது. ஆனால் குறிப்பிடப்பட்ட சில சூழ்நிலைகளில் பகுதியளவு தொகையை திரும்ப பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்க விரும்பும் பெற்றோர்களுக்கு சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் நீண்ட காலமாக நல்ல லாபத்தை வழங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications