டெல்லி: இந்தியாவை விட்டு வெளியேறுபவர்கள் டேக்ஸ் கிலியரன்ஸ் சர்டிபிகேட்(Tax clearance certificate) எனப்படும் வரி பாக்கி இல்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இது கட்டாயம் என கூறியுள்ளார்.
இதன்படி அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்தியாவை விட்டு வெளியேறும் எவரும் தங்களுக்கு வரி நிலவை எதுவும் கிடையாது என்பதற்கான உத்தரவாதமாக இருக்கக்கூடிய சான்றிதழை தாக்கல் செய்தாக வேண்டும். அதாவது கருப்பு பணம் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த சான்றிதழை சமர்ப்பணம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

வருமான வரி சட்டத்தின் பிரிவு 230 , இந்தியாவை சேர்ந்த எவரும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக வருமான வரித்துறை அதிகாரிகளிடமிருந்து வரி நிலுவையில் இல்லை என்பதற்கான சான்றிதழை பெற்றாக வேண்டும். ஒருவேளை அந்த நபர் வரிபாக்கி வைத்திருந்தால் அதனை செலுத்துவதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளார் என்பதற்கான தகவல்களை தாக்கல் செய்ய வேண்டும் என கூறுகிறது.
வருமான வரி மட்டுமல்லாது, செல்வ வரி, பரிசு வரி மற்றும் செலவின வரி ஆகியவற்றுக்கும் பொருந்தும் என சொல்லப்படுகிறது. இது கூடிய விரைவில் அரசு இது தொடர்பான விரிவான விளக்கங்களுடன் கூடிய அறிவிக்கையை வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேபோல 3 கருப்பு பணம் தடுப்பு சட்டம் பிரிவு 42 மற்றும் 43 இன் கீழ் வெளிநாட்டு சொத்துக்கள் குறித்து வருமான வரி கணக்கு தாக்கலின் போது தகவல் அளிக்காமல் இருந்தால் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சட்டம் அமலில் உள்ளது. இந்த அபராதமானது அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நீக்கப்பட உள்ளது.
எந்த ஒரு இந்திய குடிமகனும் வெளிநாடுகளில் தங்களுக்கு இருக்கக்கூடிய ரியல் எஸ்டேட் அல்லாத பிற சொத்துக்கள் குறித்த விவரங்கள் அதாவது பங்குகள் அல்லது பத்திரங்கள் என எந்த ஒரு சொத்தாக இருந்தாலும் தங்களுடைய வருமான வரி கணக்கு தாக்கலின் போது அது குறித்து குறிப்பிட வேண்டும். மேலும் அந்த சொத்தின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது என்பதையும் தெரிவித்தாக வேண்டும்.
இப்படி வெளிநாடுகளில் இருந்து தங்களுக்கு கிடைக்கக்கூடிய வருமானத்தை அவர்கள் தாக்கல் செய்யவில்லை என்றால் அந்த சொத்தின் மதிப்பு என்னவாக இருந்தாலும் அபராதம் 10 லட்சம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அது நீக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications