ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தினரின் கனவு என்னவோ ஒரே ஒரு கார் மற்றும் ஒரு சொந்த வீடு. ஆனால் இதை அடைவதற்கே பலர் அவ்வளவு சிரமத்திற்கு ஆளாகின்றனர். என்னதான் வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு லோன் வழங்கினாலும், அந்த லோனை சரிவர செலுத்த முடியுமா? என்று யோசிக்கின்றனர். அதிலும் சிலர் ஒரு படி மேலே சென்று, லோனை வாங்கிவிட்டு ஈஎம்ஐ செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதுபோன்ற நபர்கள் அனைவருக்கும் ஏற்றார் போல் ஒரு விதி வகுக்கப்பட்டுள்ளது. அதுதான் 30 சதவீத ஈஎம்ஐ விதி. இந்த விதியை பயன்படுத்தினால் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஈஎம்ஐ செலுத்தலாம்.

அதோடு சொந்த வீட்டு கனவையும் நினைவாக்கிக் கொள்ளலாம். இந்த விதி உங்கள் வாழ்க்கை செலவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடனை திருப்பி செலுத்த உதவியாக இருக்கும். அது என்ன 30 சதவீத விதி என்று தானே யோசிக்கிறீர்கள். இந்த பதிவில் அதை விரிவாக பார்ப்போம்.
30 சதவீத EMI விதி: உங்களுடைய மாதச் சம்பளத்தில் எந்த கடனாக இருந்தாலும் சரி அது 30 சதவீதத்திற்கும் மேல் செல்லக்கூடாது. உதாரணத்திற்கு நீங்கள் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கும் நபர் என்று வைத்துக்கொள்வோம். இதில் 30 சதவீதம் என்றால் ரூ.30,000.
ரூ. 30,000-த்தை மட்டும் தான் ஈஎம்ஐ செலுத்த பயன்படுத்த வேண்டும். மீதம் இருக்கும் ரூ.70,000 கை வைக்கவே கூடாது. இந்த ரூ.70,000 தொகையை உங்களுடைய பிற செலவுகளான வாழ்க்கைச் செலவுகளுக்குப் பயன்படுத்த வேண்டும். அதாவது சேமிப்பு, முதலீடு, குழந்தைகளின் கல்வி, எதிர்கால அவசரத் தேவைகள் என அனைத்திற்கும் இவற்றை ஒதுக்க வேண்டும்.
இதுபோன்று திட்டமிட்டு ஈஎம்ஐ செலுத்தினால் எந்தப் பிரச்சனையும் வராமல் வாழ்க்கைச் செலவுகளையும் ஈடுகட்ட முடியும். ஆனால் வங்கிகள் உங்கள் சம்பளத்தைப் பொறுத்து 40 முதல் 50 சதவீதம் வரை கடன் தர முன்வரும். அதை நீங்கள் தான் சரியான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும். நிதி ஆலோசகர்களின் எச்சரிக்கையும் இதுவாகத்தான் இருக்கிறது. வங்கி போடும் கணக்கை விட உங்களுடைய எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்து தான் கடன் பெற வேண்டும்.
30 சதவீத விதி என்பது ஹோம் லோன் பெறுவதற்கு மட்டும் இல்லை. கார் லோன், பைக் லோன், பர்சனல் லோன், கிரெடிட் கார்டு லோன் என அனைத்திற்கும் இந்த விதியை பயன்படுத்தலாம்.
30 சதவீத EMI விதியினால் என்ன பயன் தெரியுமா?: ஒருவேளை எதிர்பாராத விதமாக வேலை இழப்பு ஏற்பட்டாலோ அல்லது நிதி நெருக்கடி ஏற்பட்டாலோ எளிதில் EMI செலுத்த முடியும். இன்றைய காலகட்டத்தில் ஐடி துறையில் தொடர்ந்து பணிநீக்கம் நடந்து வருகிறது. அப்படி இருக்கையில் இந்த 30 சதவீத விதியை பின்பற்றும்போது எளிதில் ஈஎம்ஐ செலுத்த உதவியாக இருக்கும்.
சிபில் ஸ்கோர்: நீங்கள் கடன் பெற விண்ணப்பிக்கும் போதே வங்கிகள் உங்களுடைய சிபில் ஸ்கோரை கண்காணிக்க தொடங்கும். ஏன் சிபில் ஸ்கோரை வைத்து தான் உங்களுக்கு கடனே வழங்கும். இந்த சிபில் ஸ்கோர் மூன்று எழுத்தில் இருக்கும் எண். இதை வைத்தே நீங்கள் ஏற்கனவே கடன் பெற்றீர்களா? எந்த வங்கியில் கடன் பெற்று இருக்கிறீர்கள்? எவ்வளவு கடன் பெற்று இருக்கிறீர்கள்? அதை சரிவர திருப்பி செலுத்தி இருக்கிறீர்களா? கடைசியாக இஎம்ஐ செலுத்திய தேதி என்ன? என அனைத்தையும் தெரிந்து கொண்டு விடும்.
உங்களுடைய சிபில் ஸ்கோரை சரியான முறையில் தக்க வைக்க 30 சதவீத EMI விதி உதவியாக இருக்கும். சம்பளத்தில் 30 சதவீதம் என்பது சரியான விகிதம். அதுவே அதற்கு மேல் இருந்தால் வங்கிகள் உங்களை நல்ல நிதி நடத்தை உடையவராக கருதாது.
சேமிப்பு பாதிக்காமல் இருக்கும்: கடன் கட்டுவதற்காகவே மொத்த சம்பளத்தையும் தீர்த்துக் கொண்டே இருந்தால் எதிர்கால சேமிப்பிற்கு பணம் இல்லாமல் போகலாம். எனவே இந்த விதியை பயன்படுத்தும் போது முதலீடு மற்றும் சேமிப்பிற்கு எந்த பாதிப்பும் வராது. ஏற்கனவே கடன் பெற்று 50 சதவீதத்திற்கும் அதிகமான சம்பளத்தை கடனுக்கு செலுத்தும் நபர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் தங்களுடைய மனக்குமுறலை சொல்ல தொடங்குவார்கள். இது போன்ற சூழ்நிலையை தவிர்ப்பதற்காகத்தான் 30 சதவீதத்திற்குள் இஎம்ஐ சதவீதத்தை வைத்திருக்க நிபுணர்கள் கூறுகின்றனர்.
புதிதாக கடன் வாங்க திட்டமிட்டிருந்தால் இது போன்ற விதிகளைக் கருத்தில் கொண்டு அதன் பிறகு கடன் பெறுங்கள். கடன் வாங்குவதற்கு என்னவோ எளிதாக தோன்றலாம். ஆனால் மாதா மாதம் ஈஎம்ஐ செலுத்தும் போது தான் கஷ்டம் தெரிய தொடங்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications