சென்னை: தங்களுக்கென்று ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதே நம்மில் பலரின் விருப்பமாக உள்ளது. நியாயவிலைக் கடைகள் மூலம் உணவுப் பொருட்களை வழங்கி வந்த அரசு தற்போது குறைந்த விலையில் வீடுகளையும் வழங்கி உதவுகிறது. அதாவது நீங்கள் வீடு வாங்க பெரும் கடன்களுக்கு மானியங்களை வழங்கி வருகிறது. முன்பு இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க குறிப்பிட்ட சில நபர்களால் மட்டுமே முடியும் என்று இருந்த நிலையில், தற்போது கடை வைத்திருப்பவர், சொந்த தொழில் செய்பவர் என்று இன்னும் சில நபர்களும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு கூறியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை 25 ஜூன் 2015 அன்று அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் சொந்தமாக வீடு இல்லாதவர்களும், தனக்கென ஒரு வீடு வாங்க இயலாதவர்களும் பயனடைய முடியும். இதன் மூலன் அரசு தரும் மானியத்துடன் வீடுகளை வாங்க முடியும்.

வீடு இல்லாதவர்களுக்கு குறைந்த வீடு வழங்கும் திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தினை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்பு போல் இல்லாமல் தற்போது கடைக்காரர்கள், வியாபாரிகள் மற்றும் சுயதொழில் செய்பவர்களும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது. இது மத்திய அரசின் 'அனைவருக்கும் வீடு' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
PMAY திட்டத்தின் கீழ், குறைந்த விலையில் வீடுகளைப் பெற மக்களின் வருமானத்தின் அடிப்படையில் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்: EWS (பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு), LIG (குறைந்த வருமானம் பெறுபவர்கள்) மற்றும் MIG (நடுத்தர வருமான பெறுபவர்கள்).
PMAY திட்டத்தின் பயனாளிகள்:
MIG I பிரிவினர்: இவர்களின் ஆண்டு வருமானம் 6 முதல் 12 லட்சம் வரை இருக்க வேண்டும். மேலும் இந்த பிரிவினருக்கு மானியத்திற்காக ஒதுக்கப்பட்ட அதிகபட்ச கடன் தொகை ரூ. 9 லட்சம்.
MIG II பிரிவினர்: இவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் முதல் ரூ. 18 லட்சம் வரை இருக்கலாம். மேலும், இந்த பிரிவினருக்கு மானியத்திற்காக அனுமதிக்கப்பட்ட கடன் தொகை ரூ. 12 லட்சம்.
LIG: இந்தப் பிரிவினரின் குடும்ப வருமானம் ரூ. 3 முதல் ரூ. 6 லட்சம் வரை இருக்க வேண்டும். இந்த திட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச கடன் தொகை ரூ. 6 லட்சம்.
EWS: இந்த பிரிவினரின் வருமானம் ரூ. 3 லட்சம் வரை இருக்க வேண்டும். இவர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகை ரூ. 6 லட்சம்.
சான்றாக, நீங்கள் EWS பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று வைத்துக் கொள்வோம். மேலும் கடன் வாங்கி ரூ. 30 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்க இருக்கிறீர்கள் என்றால், அதில் 12 லட்சம் வரையிலான கடனில் நீங்கள் 3 % சதவீதம் மானியத்தைப் பெற தகுதியுடையவர்கள். மீதமுள்ள ரூ. 18 லட்சத்திற்கு மட்டும் வடியும் முதலுமாக நீங்கள் செலுத்தினால் போதுமானது.
ஒவ்வொரு திட்டத்திற்கும் அரசு விதிக்கும் விதிகளின்படி சில காலக்கெடு இருக்கும். அந்த வகையில் இந்த PMAY - அனைவருக்கும் வீடு என்ற திட்டத்திற்கு அசல் காலக்கெடு மார்ச் 2022 ஆக இருந்தது. பின்னர் அது டிசம்பர் 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின், மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் PMAY திட்டத்தினை விரிவுபடுத்தும் விதமாக 66% உயர்த்தி ரூ.79,000 கோடியை இந்த திட்டத்தின் செலவுகளுக்காக அறிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், "கோவிட் காரணமாக சவால்கள் இருந்தபோதிலும், பிரதமர் ஆவாஸ் யோஜனா தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருந்தது. மேலும் நாங்கள் மூன்று கோடி வீடுகளை கட்டித் தந்த இலக்கை நெருங்கிவிட்டோம். குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்படும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் இரண்டு கோடி வீடுகள் வழங்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.
பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் வகைகள்: மத்திய அரசின் இந்த PMAY திட்டம் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவை PM பிரதமர் ஆவாஸ் யோஜனா அர்பன் மற்றும் PM பிரதமர் ஆவாஸ் யோஜனா ரூரல்.
பிரதமர் ஆவாஸ் யோஜனா அர்பன்: நாட்டிலுள்ள 4,000க்கும் மேற்பட்ட நகர்ப்புறங்களில் வசிக்கும் EWS, LIG மற்றும் MIG போன்ற பிரிவுகளின் கீழ் உள்ள மக்களுக்கு வீடு வழங்குவதே இதன் நோக்கமாகும். இந்த ஆண்டு டிசம்பருக்குள், நகர்ப்புறங்களில் இத்திட்டத்தினை இன்னும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது.
பிரதமர் ஆவாஸ் யோஜனா ரூரல்: பிரதமர் ஆவாஸ் யோஜனா கிராமின் கீழ், நாட்டின் கிராமப்புறங்களில் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் வீடு வழங்குவதே இதன் நோக்கமாகும். பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு தேவைப்படும் செலவை மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும். அதன் படி சமவெளிப் பகுதிகளுக்கு 60:40 ஆகவும், வடகிழக்கு பகுதிகளுக்கு 90:10 ஆகவும் செலவுகளை மத்திய மற்றும் மாநில அரசு பிரித்துக் கொள்ளும்.
ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
1. ஆதார் அட்டை
2. மொபைல் நம்பர்
3. பேங்க் பாஸ்புக்
4. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
5. தூய்மை இந்தியா இயக்கம்(Swachh Bharat Mission) பதிவு எண்
மேற்கண்ட ஆவணங்களையும் வைத்திருப்பவர்கள் ஆன்லைனில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (https://pmaymis.gov.in)சென்று விண்ணப்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications