இந்தியாவின் மிகவும் பழமையான தனியார் வங்கி நிறுவனமான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி செப்டம்பர் 5-ம் தேதி ஐபிஓ மூலம் 832 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வெளியிட உள்ளது.
ஏறக்குறைய 3 மாதங்களுக்குப் பிறகு, அடுத்தடுத்து 3 நிறுவனங்கள் தங்களது பங்குகளை ஐபிஓ மூலம் வெளியிட்டுள்ளனர்.
எனவே அடுத்த வர இருக்கும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஐபிஓ இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
தேதி
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஐபிஓ பங்குகளைச் செப்டம்பர் 5-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை வாங்கலாம். நீண்ட நாட்களுக்குப் பின்பு வங்கி நிறுவனம் ஒன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது.
விலை
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பங்குகளை 500 ரூபாய் முதல் 525 ரூபாய் வரை கொடுத்து ஐபிஓவில் வாங்கலாம். இது முற்றிலும் புதிய பங்கு வெளியீடு - அதாவது முதலீடு முழுமையாக நிறுவனத்திற்குச் செல்லும்.
எவ்வளவு பங்குகள் வாங்க வேண்டும்
ஐபிஓவில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பங்குகளைக் குறைந்தது 28 பங்குகள் ஒரு லாட் என வாங்க வேண்டும். அதற்கு குறைந்தது 14000 ரூபாய் முதல் 14700 ரூபாய் வரை தேவைப்படும். ரீடெயில் முதலீட்டாளர்கள் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் (1,91,100 ரூபாய்) வரை வாங்கலாம்.
க்ரே மார்க்கெட்
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பங்குகள் க்ரே மார்க்கெட்டில் 31 ரூபாய்க்கு இன்று விற்பனையாகி வருகிறது என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்போது என்எஸ்ஈ, பிஎஸ்ஈ-ல் பட்டியலிடப்படும்?
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பங்குகள் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் 2022-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதிக்குள் பட்டியலிடப்படும். செப்டம்பர் 12-ம் தேதி பங்குகள் அலாட் செய்யப்படும். செப்டம்பர் 14-ம் தேதி டீமாட் கணக்கில் வரவு வைக்கப்படும்.
முதலீட்டாளர்கள்
நிறுவன முதலீட்டாளர்கள் 75 சதவீத பங்குகளை வாங்கலாம். நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் 15 சதவீத பங்குகளை வாங்கலாம். ரீடெயில் முதலீட்டாளர்கள் 10 சதவீத பங்குகளை வாங்கலாம். மொத்தமாக 15,840,000 பங்குகள் விற்பனை செய்யப்படுகிறது.
நீங்கள் வாங்கலாம்?
வலுவான பாரம்பரியம், விசுவாசமான வாடிக்கையாளர், தமிழ்நாட்டில் வலுவான இருப்பு மற்றும் தொடர்ந்து வளர்ந்து வரும் வங்கி சேவை நிறுவனம் என்பதால் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பங்குகளை வாங்கலாம் என Ajcon Global பரிந்துரைத்துள்ளது.
குறிப்பு
இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் நிபுணர்களின் பார்வைகள் மற்றும் முதலீட்டு உதவிக்குறிப்புகள் அவர்களின் சொந்த கருத்துகள் ஆகும். எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன், பயனர்கள் சான்றளிக்கப்பட்ட நிபுணர்களுடன் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் இழப்புகளுக்குத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் பொறுப்பல்ல.


Click it and Unblock the Notifications