வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் பணிகளில் , பெரும்பாலான ஊதிய தாரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சமயங்களில் வரியை மிச்சப்படுத்துவதற்கான வழிகளை அனைவரும் தேடுவோம். அந்த வகையில் எந்த முதலீடுகளும் மேற்கொள்ளாமல் வருமான வரியை சேமிப்பதற்கு உள்ள வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்..
கல்வி கடன் வட்டி: உயர் கல்விக்காக வாங்கி கல்வி கடன்களுக்கு செலுத்தும் வட்டி தொகையை குறிப்பிட்டு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80Eஇன் கீழ் விலக்கு பெற முடியும். இதற்கு என உச்சவரம்பு தொகை எதுவும் இல்லை, கடன் செலுத்த தொடங்கி 8 ஆண்டுகள் வரை வரி விலக்கு கோரலாம்.

குழந்தைகளுக்கான கல்வி கட்டணம்: உங்களின் குழந்தைகளின் கல்விக்காக செலுத்தும் கட்டணங்களை சுட்டிக்காட்டி ஓர் நிதியாண்டில் 1.50 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். இரண்டு குழந்தைகள் வரை இந்த சலுகை கிடைக்கும். பிளே ஸ்கூல் தொடங்கி பெரிய வகுப்புகள் வரை கட்டணங்களுக்கு விலக்கு கோரலாம்.
அறக்கட்டளை நன்கொடைகள்: அரசால் அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளைகளுக்கு செலுத்தும் நன்கொடைகளுக்கு பிரிவு 80Gஇன் கீழ் வரி விலக்கு கிடைக்கும். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 50% அல்லது 100% வரை வரி சலுகை பெறலாம். நன்கொடை பெற்ற அறக்கட்டளையின் பெயர், முகவரி, பான் ஆகிய விவரங்களை வழங்க வேண்டும்.
மருத்துவ காப்பீட்டு பிரீமியம்: உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் செலுத்தும் மருத்துவ காப்பீடுகளுக்கான பிரீமியம் தொகைகளுக்கு பிரிவு 80Dஇன் கீழ் வரி விலக்கு பெறலாம். தனிநபர்கள் தனக்கும் குடும்பத்தினருக்கும் செலுத்தும் பிரீமியம் தொகையில் 25,000 ரூபாய் வரி விலக்கும், மூத்த குடிமக்களுக்கு செலுத்தும் பிரீமியம் தொகைகளுக்கு 50,000 ரூபாய் வரையும் வரி சலுகை பெறலாம்.
வீட்டு கடன் வட்டி மற்றும் அசல்: வீட்டு கடன்களுக்கு செலுத்தும் வட்டி தொகைக்கு பிரிவு 24(b) இன் கீழ், ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரி விலக்கும், அசல் தொகைக்கு பிரிவு 80Cஇன் கீழும் வரி சலுகை பெறலாம். பழைய வரி நடைமுறையில் மட்டுமே இது கிடைக்கும்.
வீட்டு வாடகை: நீங்கள் செலுத்தும் வீட்டு வாடகைக்கு கூட வரி விலக்கு கிடைக்கும். வருமான வரி சட்டத்தின் பிரிவு 10இன் கீழ் நீங்கள் வசிக்கும் நகரம் மற்றும் உங்களுக்கு கிடைக்கும் ஊதியம் ஆகியவற்றின் அடிப்படையில் வரி விலக்கு கிடைக்கும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications