சென்னை: இந்தியாவில் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கு சரியாக இன்னும் ஒரு மாத காலம் தான் இருக்கிறது. முதன்முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு இது மிகப்பெரிய ஒரு சிக்கலான விஷயமாக தோன்றலாம். ஆனால் பின்வரும் விஷயங்களை முறையாக நீங்கள் பின்பற்றினால் வருமானவரி கணக்கு தாக்கல் என்பது நொடிப்பொழுதில் முடிந்து விடும் ஒரு வேலையாக மாறிவிடும்.
வரிக்கு உட்பட்ட வருமானம் எவ்வளவு: உங்களுக்கு வரக்கூடிய சம்பளம் எவ்வளவு, அதில் வரிக்கு உட்பட்ட சம்பளம் எவ்வளவு என்பதை முதலில் கணக்கிடவும் . சம்பளம் இல்லாமல் உங்களுக்கு வேறு வங்கி டெபாசிட்டுகள் மற்றும் பங்குகள் டிவிடெண்ட் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்கிறதா என கணக்கிடுங்கள். இதனை அடுத்து உங்களுக்கு வருமான வரி விலக்கு பெறுவதற்கான பிபிஎஃப் உள்ளிட்ட முதலீடுகள், காப்பீடு மற்றும் வீட்டுக் கடன் உள்ளிட்டவை ஏதேனும் இருக்கிறதா என கணக்கிடுவது நல்லது.

பழைய நடைமுறை அல்லது புதிய நடைமுறை: இந்தியாவில் பழைய வரி நடைமுறை மற்றும் புதிய வரி நடைமுறை என இரண்டு விதங்களில் நாம் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்ய முடியும். இதில் எது உங்களுக்கு பொருத்தமானது என முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
கடைசி தேதி : இந்தியாவில் இந்த ஆண்டு வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாக செப்டம்பர் 15ஆம் தேதி இருக்கிறது. டிசம்பர் 31ஆம் தேதி வரை கூட நாம் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்யலாம் ஆனால் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு செய்யப்படும் போது அதற்கு நாம் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
என்னென்ன ஆவணங்கள்: வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கு முன்பாக உங்களுடைய நிறுவனம் உங்களுக்கு வழங்கி இருக்கும் படிவம் 16 ,பான் கார்டு, ஆதார் கார்டு மற்றும் பிபிஎஃப் டெபாசிட் ,இன்சூரன்ஸ் பிரீமியம் ரசீது உள்ளிட்டவற்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
படிவம் 16 : படிவம் 16 என்பது நீங்கள் வேலை செய்யக்கூடிய நிறுவனம் உங்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் அதில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை என்பன உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும் ஒரு ஆவணம் இது இருந்தால் மிக எளிதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம்.
படிவம் 26 ஏஎஸ் மற்றும் படிவம் ஏஐஎஸ்: இந்த படிவங்களை நாம் இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த இரண்டுமே அந்த குறிப்பிட்ட நிதியாண்டில் நம்முடைய அனைத்து வகையான வருமானம் குறித்த முழுமையான தகவல்களை கொண்டிருக்கும் .
ஆன்லைனில் சரிபார்த்தல்: வருமானவரி கணக்கினை ஆன்லைனில் தாக்கல் செய்த பிறகு அதனை இ வெரிஃபிகேஷன் செய்வது கட்டாயம். கணக்கு தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் இ வெரிஃபிகேஷன் எனப்படும் ஆன்லைன் சரிபார்ப்பு முறையை முடிக்கவில்லை என்றால் உங்களுக்கு வரவேண்டிய ரீஃண்டு தொகை வராமல் போகலாம் அல்லது உங்களுடைய வருமானவரி கணக்கு ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஓடிபி அனுப்பி இ வெரிஃபிகேஷனையும் முடித்துக் கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications