நாடு முழுவதும் டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து, வரும் வாரத்தில் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தினை அறிவித்துள்ளனர்.
இதன் காரணமாக இந்த இரண்டு நாட்களில் வங்கி சேவையானது தடைபடலாம், ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 17ம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கவுள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளது.
பட்ஜெட்டிலேயே அறிவிப்பு
வங்கிகளின் வாரக்கடன் நிலுவைகளை ஈடு செய்வதற்காகவும், பல்வேறு சீர்திருத்தங்களுக்கு மத்தியில் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று 2021 -2022 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதற்கு நாட்டின் பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
சமாதான முயற்சி
எனினும் நடப்பு நிதியாண்டில் 2 பொதுத்துறை வங்கிகளின் பங்கினை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வங்கி ஊழியர்களின் எதிர்ப்புக்கு மத்தியில், அவர்களின் அச்சத்தினை களைய தனியார்மயமாக்கப்பட கூடிய வங்கிகளின் தொழிலாளர்களின் நலன்கள் அவர்களின் சம்பளம், ஓய்வூதியம் அனைத்தும் எப்போதும் போல் வழங்கப்படும், அதில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்தது.
ஊழியர்கள் போராட்டம்
ஆனாலும் இந்த விவகாரத்தில் வங்கி ஊழியர்கள் தொடர்ந்து அதிருப்தி நிலையிலேயே உள்ளனர். இதனால் மத்திய அரசின் வங்கிகளை தனியார்மயமாக்கும் முடிவை எதிர்த்து, வரும் டிசம்பர் 16 மற்றும் 17ம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தை வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அரசுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் சுமூக நிலை எட்டப்படாத நிலையில், வரும் வாரத்தில் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கி பணிகள் பாதிக்கப்படலாம்
பொதுத்துறை வங்கி ஊழியர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால், வங்கி பணிகள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இது பொதுத்துறை வங்கிகளின் போராட்டம் என்பதால், தனியார் வங்கிகள் வழக்கம்போல செயல்படலாம். இருப்பினும் பொதுமக்கள் தங்களின் வங்கி பணிகளை மேற்கொள்வதில் முன்னெச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.


Click it and Unblock the Notifications