இப்போது எல்லாம் வெளியில போகும் போது ரொக்கமா பணம் எடுத்து கொண்டு போகனும்னு அவசியம் இல்லை. கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் இருந்தால் போதும், நாம நினைத்த நேரத்தில் நினைத்த பொருளை வாங்க முடியும். மீதி சில்லறை இல்லனு தேடி அலைய வேண்டிய அவசியமில்லை.
யுபிஐ எனப்படும் யுனிஃபைட் பேமன்ட்ஸ் இண்டர்பேஸ் மூலமாக நேரடியாக வங்கி கணக்கில் இருந்து , நண்பருக்கோ, வியாபாரிக்கோ பணம் அனுப்ப முடிகிறது. இந்த நவீன தொழில்நுட்பத்தால் பணப் பரிமாற்றங்கள் மிக எளிதாகி இருக்கின்றன.

குறிப்பாக இந்தியா ஃபின்டெக் எனப்படும் நிதி பரிமாற்ற தொழில்நுட்ப வளர்ச்சியிலும், டிஜிட்டல் பரிமாற்ற கட்டமைப்பிலும் உலகிற்கே முன் உதாரணமாக மாறி வருகிறது.
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்றவற்றை பயன்படுத்துவது மிக எளிதாக உள்ளது. இத்தகைய யுபிஐ செயலிகளில் மேலும் பல சிறப்பு வசதிகள் உள்ளன. அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
தானாகவே வாடகை, கரண்ட் பில் செலுத்தும்: வீட்டு வாடகை, கரண்ட் பில், ஓடிடி தளங்களுக்கான சந்தாக்கள், மாதாந்திர ரீசார்ஜூகள் போன்றவற்றை நீங்கள் பயன்படுத்தும் யுபிஐ செயலியில் ஆட்டோ பே இ- மேன்டேட் முறையை பயன்படுத்தி தானியக்கமாக மாற்றலாம். அதாவது நீங்கள் இ-மேன்டேட் அனுமதி கொடுத்தால் மாதந்தோறும் தானாகவே வாடகை செலுத்துவது, பில் கட்டுவது போன்றவை நடைபெறும்.
செலவை கண்காணிக்கலாம்: யுபிஐ செயலிகள் உங்கள் பணத்தை எதற்கெல்லாம் செலவு செய்தீர்கள் என்ற அறிக்கையையும் வழங்கும். அதாவது யுபிஐ செயலியில் நீங்கள் எதற்கெல்லாம் பணம் செலுத்தினீர்கள் என்பதை அடிப்படையாக கொண்டு செலவை கண்காணித்து அறிக்கை வழங்குவதால். நீங்கள் இதனை திறம்பட பயன்படுத்தி தேவையற்ற செலவுகளை குறைக்கலாம். உங்களின் அனைத்து பரிவர்த்தனைகளையும் ஒரே இடத்தில் கண்காணிக்கலாம்.
யுபிஐ லைட்: யுபிஐ லைட் எனப்படும் சிறப்பம்சத்தை பயன்படுத்தி சிறிய தொகைகளுக்கு PIN போடாமல் பணம் செலுத்தலாம். ரூ.500 வரையிலான பணப் பரிமாற்றங்களுக்கு PIN எண்ணை போட வேண்டிய தேவையில்லை.
வெளிநாடுகளிலும் யுபிஐ பயன்படுத்தலாம்: பல்வேறு நாடுகள் இந்தியாவின் யுபிஐ பரிமாற்ற முறையை ஏற்றுக்கொண்டுள்ளன. இலங்கை, பிரான்ஸ், சவுதி அரேபியா,பஹ்ரைன், சிங்கப்பூர், பூடான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலும் நீங்கள் யுபிஐ பயன்படுத்தி பணம் செலுத்த முடியும்.
யுபிஐ மூலம் கடன் பெறலாம்: நமது வங்கி கணக்குடன் தான் யுபிஐ இணைக்கப்பட்டுள்ளது. எனவே, யுபிஐ மூலம் கிரெடிட் கார்டு போல குறிப்பிட்ட தொகையை கடனாக பெற்று பயன்படுத்த முடியும். அதாவது முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் என இதனை கூறுகிறார்கள். இதற்காக நீங்கள் யுபிஐ-இல் இணைக்கப்பட்டுள்ள , கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று கடன் வரம்பை நிர்ணயித்து அங்கீகரிக்கும் விண்ணப்பத்தை வழங்க வேண்டும்.
வங்கி இதற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் , உங்கள் கணக்கில் பணம் இல்லை என்றாலும் நீங்கள் முன் அனுமதி பெற்ற தொகையை யுபிஐ செயலியிலேயே கடனாக பெற முடியும். பின்னர் உங்கள் வங்கியின் நிபந்தனைகளுக்கு ஏற்ப திரும்ப செலுத்தலாம். கடன் வாங்க வங்கிகளுக்கு சென்று அலைய வேண்டியதில்லை.


Click it and Unblock the Notifications