டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் வந்ததிலிருந்து மக்கள் பெட்டிக்கடை தொடங்கி பெரிய பெரிய மால்கள் வரை எங்கு பார்த்தாலும் யூபிஐ மூலம் பணம் அனுப்புகின்றனர். இதனால் வங்கிக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டது. ஒருபுறம் யூபிஐ பேமெண்ட் வசதியாக இருந்தாலும்.. பணம் அனுப்பும்போது சில பிரச்சனைகளும் அவ்வப்போது ஏற்படத்தான் செய்கிறது.
யூபிஐ மூலம் பணம் அனுப்பும் சிலருக்கு கணக்கிலிருந்து பணம் டெபிட் செய்யப்பட்டிருக்கும். ஆனால் "Transaction failed" என்று மெசேஜ் வரும். தினமும் பணம் அனுப்பும் லட்சக்கணக்கானவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனை இது.
சில நேரங்களில் இந்தப் பணம் தானாகவே அக்கவுண்டுக்கு வந்துவிடும். அதற்காக நேஷனல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் வங்கிகள் இணைந்து பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஆனால் ஒரு சில நேரங்களில் பணம் அக்கவுண்டுக்கு வராது. அப்படி இருந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பதைத்தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

60 நிமிடம் வரை காத்திருங்கள்: யூபிஐ பரிவர்த்தனை செய்துவிட்டு ஒரு மணி நேரம் வரை காத்திருந்தால் இந்த பிரச்சனை தானாகவே சரியாகிவிடும். ஆனால் இந்த இடைப்பட்ட நேரத்தில் அவசரப்பட்டு மீண்டும் மீண்டும் பணம் அனுப்பாதீர்கள். NPCI விதிகளின்படி "Transaction failed" என்று மெசேஜ் வந்து பணம் டெபிட் ஆகியிருந்தால்.. 60 நிமிடங்களில் உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வந்துவிடும்.
ஏன் இந்த பிரச்சனை ஏற்படுகிறது?: மனிதர்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகளாலும் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. தவறான யுபிஐ பின் நம்பர், வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாமல் பரிவர்த்தனை செய்ய முயற்சிப்பது, தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட ட்ரான்ஸ்சாக்சன் செய்து ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை அனுப்புவது, பேங்க் ஐடியை தவறாக என்டர் செய்வது போன்ற பல காரணங்களால் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது.
சில சமயங்களில் தொழில்நுட்ப கோளாறும் இதற்கு காரணமாக அமைகிறது. மாத இறுதியில் சர்வர்களில் பிரச்சனை ஏற்படும். அந்த சமயத்தில் பெரும்பாலானோர் பணம் அனுப்பவும், பணம் பெறவும் செய்வார்கள்.
UDIR வசதியை பயன்படுத்துங்கள்: ஒவ்வொரு யூபிஐ ஆப்-பிலும் யூனிஃபைடு டிஸ்ப்யூட் அண்ட் இஸ்யூ ரிசொல்யூஷன் என்னும் வசதி இருக்கும். இந்த ஆப்ஷனைப் பயன்படுத்தி ரீஃபண்ட் பெறலாம். அதற்கு உங்கள் யூபிஐ ஆப்-பை திறந்து ட்ரான்ஸ்ஷாக்ஷன் ஹிஸ்டரி என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு "Check Status" அல்லது "Raise Issue" என்ற ஆப்ஷன் இருக்கும். இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலமாகவே பெரும்பாலான பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு பெற முடியும்.
UDIR ஆப்ஷன் மூலம் உங்களுக்கு பிரச்சனை சரியாகவில்லை என்றால்.. நீங்கள் யூபிஐ ஆப்-பில் நேரடியாக புகார் அளிக்கலாம். கூகுள் பேவாக இருந்தால் உங்கள் ப்ரொபைலை கிளிக் செய்து "Help & Feedback" என்ற பக்கத்திற்கு சென்று "Transaction Issues" என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
போன் பே பயன்படுத்தினால் "Help" பக்கத்திற்கு சென்று "Report Issue" ---> "Payment Issues"---> "Money Deducted" என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதுவே பேட்டியமாக இருந்தால் "Help" ---> "Payment Issues" ---? "Raise Dispute" என்ற பக்கத்திற்கு சென்று புகார் அளிக்க வேண்டும்.
புகார் அளிக்கும்போது 12 இலக்க யூபிஐ ட்ரான்ஸ்சாக்சன் ஐடியையும் சேர்த்து எந்த ட்ரான்ஸ்சாக்சன் ஃபெயில் ஆனதோ அந்த ட்ரான்ஸ்சாக்சனின் ஸ்கிரீன்ஷாட் அனுப்ப வேண்டும். ஒருவேளை இந்த ஆப்ஷனும் உங்களுக்கு பயனளிக்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் வங்கிக்கு நேரடியாக தொடர்புகொள்ளலாம்.
வங்கியின் வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்பு கொள்ளுங்கள்: வங்கியின் வாடிக்கையாளர் சேவையை அழைத்து பன்னிரண்டு இலக்க UTR நம்பர், அக்கவுண்ட் நம்பர், பரிவர்த்தனை செய்யப்பட்ட தேதி, நேரம் மற்றும் எவ்வளவு பணத்தை அனுப்பி வைத்தீர்கள்? என்ற எல்லா விவரங்களையும் வழங்க வேண்டும். உங்கள் புகாரை ஊழியர்கள் பதிவு செய்து கொண்டு உங்களுக்கு ஒரு ரெஃபரன்ஸ் நம்பரை கொடுப்பார்கள். அதை பத்திரமாக வைத்திருங்கள்.
வங்கி தரும் இழப்பீட்டுத் தொகை: ஆர்பிஐ விதிகளின்படி ஒரு நபர் மற்றோரு நபருக்கு பணம் அனுப்பி.. அது சென்ட் ஆகாமல் அக்கவுண்டிலிருந்து பணம் எடுக்கப்பட்டிருந்தால் பரிவர்த்தனை செய்யப்பட்ட தேதியிலிருந்து ஒரு வேலை நாளுக்குள் திரும்ப அனுப்பப்பட வேண்டும். அப்படி இல்லை என்றால் தாமதமாகும் ஒவ்வொரு நாளும் வங்கி உங்களுக்கு இழப்பீடாக 100 ரூபாய் வழங்க வேண்டும்.
நீங்கள் புகார் அளித்து முப்பது நாட்கள் ஆகியும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றால் ஆர்பிஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான cms.rbi.org.in என்ற இணையதளத்திற்குச் சென்று புகார் அளிக்கலாம்.


Click it and Unblock the Notifications
