தங்களுடைய சேமிப்பை சீக்கிரம் டபுள் ஆக்க வேண்டும் என்பதுதான் இங்கு பல முதலீட்டாளர்களின் கனவாக இருக்கிறது. அப்படி உங்களிடமும் சேவிங்ஸ் அக்கவுண்டில் ரூ.50,000 இருந்து அதை ரூ.1 லட்சமாக மாற்ற விரும்பினால் உங்களுக்கு தான் இந்தப் பதிவு. இதில் உங்களுடைய சேமிப்பை விரைவாக இரட்டிப்பாக்குவதற்கான திட்டங்களைத் தான் பார்க்கப் போகிறோம்.
ஒரு சில அரசாங்கத் திட்டங்கள் குறிப்பிட்ட காலத்தில் உங்களுடைய பணத்தை இரண்டு மடங்காக மாற்றி தரும். உதாரணமாக கிசான் விகாஸ் பத்ரா, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் போன்ற அரசாங்க திட்டங்கள் சீக்கிரம் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும்.
உங்கள் பணம் எப்போது இரட்டிப்பாகும்? என்பதை ஒரு எளிய பார்முலாவை வைத்து கண்டுபிடித்துவிடலாம். இதைத்தான் ரூல் ஆஃப் 72 என்று கூறுவார்கள். உதாரணமாக 72 என்ற நம்பரை நீங்கள் முதலீடு செய்ய போகும் திட்டத்தின் வட்டி விகிதத்தோடு வகுக்க வேண்டும். அப்போது கிடைக்கும் நம்பர் தான் உங்களுடைய முதலீடு எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்பதை கூறும்.

அதாவது ஒரு திட்டத்திற்கு 7.5% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் 72-ஐ 7.5 என்ற வட்டி விதத்தால் வகுக்க வேண்டும். 72/7.5 = 9.6 ஆண்டுகள். நீங்கள் போடும் முதலீடு 9.6 ஆண்டுகளில் இரட்டிப்பாக மாறும்.
இந்த ஃபார்முலாவை வைத்து அரசாங்கத் திட்டங்களில் முதலீடு செய்தால் எத்தனை ஆண்டுகளில் உங்கள் முதலீடு இரட்டிப்பாகும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
கிசான் விகாஸ் பத்ரா (KVP): பணத்தை டபுளாக்கும் திட்டம் என்றாலே இந்த திட்டம்தான் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வரும். இந்த திட்டத்திற்கு தற்போது 7.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் உங்களுடைய ரூ.50,000,ரூ.1 லட்சமாக மாற 9 ஆண்டுகள் 7 மாதம் எடுக்கும்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY): SSY திட்டத்தை செல்வமகள் சேமிப்பு திட்டம் என்றும் அழைப்பார்கள். இதற்கு தற்போது 8.2 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் போடும் ரூ.50,000 முதலீடு 8 ஆண்டுகள் 10 மாதத்தில் இரட்டிப்பாக மாறும். இது பெண் குழந்தைகளுக்காகவே வழங்கப்படும் பிரத்தியேகத் திட்டம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதன் முதிர்வு காலம் 21 ஆண்டுகள். உங்கள் முதலீடு 8 ஆண்டுகள் 10 மாதத்திலேயே இரட்டிப்பாக மாறிவிடும். ஆனால் லாக்கின் காலம் முடிந்த பிறகே பணத்தை பெற முடியும்.
பொது வருங்கால வைப்பு நிதி: பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு 7.1 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் நீங்கள் போடும் ரூ.50,000, ரூ.1 லட்சமாக மாற 10 ஆண்டுகள் 2 மாதங்கள் எடுக்கும். ஆனால் இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். அதன் பிறகே உங்களுடைய முதலீட்டைத் திரும்பப் பெற முடியும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு தற்போது 8.2 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் போடும் முதலீடு 8 ஆண்டுகள் 10 மாதத்தில் இரட்டிப்பாக மாறும்.
முதலாவதாக கூறப்பட்டுள்ள கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் சரியாக 9 ஆண்டுகள் 7 மாதத்தில் உங்களுடைய முதலீடு இரட்டிப்பாக மாறிவிடும். அதுதான் அந்தத் திட்டத்தின் லாக்கின் காலமும் கூட. எனவே லாக்கின் காலம் முடிந்தவுடன் உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். மீதமுள்ள திட்டங்களுக்கு லாக்கின் காலம் சற்று அதிகம். ஆனால் அதற்குள் உங்கள் முதலீடு இரட்டிப்பாகிவிடும். அதற்கு தொடர்ந்து வட்டியும் வந்து கொண்டிருக்கும். ஆனால் முதிர்வு காலம் முடிந்த பின்னரே பணத்தை எடுக்க முடியும். ஒரு சில விதிகளுக்குட்பட்டு முன்பே எடுக்கும் வசதியும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications
