பணத்தை சம்பாதிப்பதை விட இன்றைய காலகட்டத்தில் அதனை சரியான திட்டத்தில் முதலீடு செய்வது என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
சம்பாதிக்கும் பணத்தை வெறுமனே சேமிக்காமல், நல்ல லாபம் தரும் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் உங்கள் பணத்தை தூங்க விடாமல் உங்களுக்காக வேலை செய்ய வைக்க வேண்டும் என்று முதலீட்டு ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
பணவீக்கம் அடிப்படையில் முதலீடு
குறிப்பாக தொடர்ந்து பணவீக்கம் என்பது உச்சத்திலேயே இருந்து வரும் நிலையில், எதிர்காலத்தில் இன்னும் என்னவாகுமோ? அதற்கேற்ப உங்கள் முதலீட்டினையும் திட்டமிட வேண்டும். ஆக பணவீக்கத்தின் அடிப்படையில் பார்த்தால், வங்கி பிக்சட் டெபாசிட் என்பது பெரிதாக உங்களுக்கு கைகொடுக்காது எனலாம்.
போதிய அனுபவம் வேண்டும்
பங்கு சந்தைகளில் முதலீடு செய்யலாம் எனில், சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது மிக அதிகமாக இன்னும் சிறிது காலத்திற்கு நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டகால நோக்கில் நல்ல வாய்ப்பு தான் என்றாலும், இதில் போதிய அனுபவம் இருந்தால் தான் முதலீடு செய்ய வேண்டும். அனுபவம் இல்லாதவர்கள் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யலாம்.
ரூ.10 கோடி கார்ப்பஸ் இலக்கு
20 வயதான ஒருவர் தனது 60 வயதில் தனக்கு 10 கோடி ரூபாய் கார்ப்பஸ் இலக்காக நிர்ணயம் செய்கிறார். அதற்காக எவ்வளவு முதலீடு செய்யணும்? அதற்கு எவ்வளவு வருமானம் கிடைக்கணும். இதே வயது அதிகமானவர்கள் என்ன செய்யலாம்? வாருங்கள் பார்க்கலாம்.
நீண்ட கால நோக்கில் பொதுவாக பெரியளவிலான கார்பஸினை உருவாக்க மியூச்சுவல் ஃபண்டுகளே சிறந்த வழி என கூறும் நிபுணர்கள், அதனை இளம் வயதிலேயே செய்ய பரிந்துரை செய்கின்றனர்.
ரூ.10 கோடி சாத்தியமா?
20 வயதான ஒருவர் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்கிறார். இதில் மாதம் 8416 ரூபாய் முதலீடு செய்கிறார். அவரின் லாபம் எதிர்பார்ப்பு 12% ஆகும். அவரின் 60 வயதில் அவரின் இலக்கான 10 கோடி ரூபாயினை எட்டலாம். இதே 25 வயதானவர் மற்றும் 30 வயதானவர்கள் 15,396 ரூபாய் மற்றும் 28,329 ரூபாய் மாதம் முதலீடு செய்வதன் மூலம் இலக்கினை அடைய முடியும் என நிபுணர்கள் கணக்கீடு செய்துள்ளனர்.
வருமானத்திற்கு ஏற்ப திட்டம்
கடந்த சில ஆண்டுகளாக கொரோனாவின் வருகைக்கு பிறகு பங்கு சந்தையில் தாக்கம் இருந்து வரும் நிலையில், ஏற்ற இறக்கம் என்பது மிக அதிகம். ஆக மியூச்சுவல் ஃபண்டுகளே சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. நீங்கள் ஆப்லைனிலோ அல்லது ஆன்லைனிலோ, இங்கு நேரடியாக முதலீடு செய்யலாம். உங்களில் வருமானத்திற்கு ஏற்ப திட்டமிட்டு கொள்ளலாம்.
சரியான ஃபண்டினை தேர்வு செய்ய வேண்டும்.
அதேபோல் இதில் நீங்கள் மிக முக்கியமாக சரியாக செய்ய வேண்டிய ஒரு விஷயம் சரியான பண்டினை தேர்வு செய்ய வேண்டியது தான். அப்படி செய்யும்பட்சத்தில் உங்கள் கார்ப்பஸினை அடைய இது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். எனினும் இதில் தான் பலரும் பிரச்சனைகளை மேற்கொள்கின்றனர். சரியான பண்டுகளை தேர்ந்தெடுக்க முடியாவிட்டால், சரியான நிதி ஆலோசகரை அணுகி பெறலாம். இது உங்களுக்கு பயனளிக்கலாம்.


Click it and Unblock the Notifications