சென்னை: தன்னுடைய பணத்தை முதலீடு செய்ய வேண்டும் , அது ஓரளவு வருமானம் ஈட்டி தந்தாலே போதும் பெரிய அளவில் நான் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை என நினைப்பவர்களுக்கு என்றே ஒரு சூப்பரான முதலீட்டு திட்டம் இருக்கிறது.
நீங்கள் உங்களுடைய பணத்தை அரசுக்கு கடனாக வழங்க முடியும் இதை தான் அரசு பத்திரங்கள் என அழைக்கிறோம். அதாவது அரசு அவ்வப்போது நிதி திரட்டுவதற்காக பத்திரங்களை வெளியீடு செய்யும். இது அரசாங்கம் நம்மிடம் கடன் வாங்குவது போல ஆகும். நாம் பணம் கொடுத்து இந்த பத்திரங்களை வாங்கிக் கொள்ள வேண்டும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு அரசு அந்த பணத்தை நமக்கு வட்டியோடு திரும்ப தரும்.

அரசிடம் நம்முடைய பணம் செல்கிறது, அரசு அந்த பணத்தை பயன்படுத்திக்கொண்டு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வட்டியோடு நமக்கு திரும்ப கொடுக்கிறது. பொதுவாகவே மிக மிகக் குறைந்த ஆபத்துக் கொண்ட ஒரு முதலீட்டு வாய்ப்பாக அரசு பத்திரங்கள் பார்க்கப்படுகின்றன. இங்கே நீங்கள் நம்முடைய முதலீடு பறிபோய்விடுமா அல்லது நாம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போய்விடுமா என்று எந்த ஒரு அச்சமும் இல்லாமல் நம்பிக்கையோடு பணத்தை முதலீடு செய்ய முடியும்.
என்னிடம் ஒரு கணிசமான தொகை இருக்கிறது, அதனை வங்கி கணக்கில் வைத்திருக்க விரும்பவில்லை, பாதுகாப்பான முதலீட்டில் ஒரு நிலையான வருமானம் கிடைக்கும் கருவியில் முதலீடு செய்ய வேண்டும் என்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். குறிப்பாக 50 வயதை கடந்தவர்களும் பணி ஓய்வு பெற்றவர்களும் இது போன்ற அரசு பத்திரங்களில் முதலீடு செய்வது மிக மிக பாதுகாப்பானது என்கின்றனர் முதலீட்டு துறை சார்ந்த நிபுணர்கள்.
பங்குச்சந்தைகள் போலவோ அல்லது மற்ற முதலீட்டு கருவிகளைப் போலவோ அரசு பத்திரங்கள் அதிக வருமானத்தை தராது ஆனால் இது மிக மிக பாதுகாப்பானது என்கின்றனர். அரசு உள்கட்டமைப்புகளை மேற்கொள்வது மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவது ஆகிய பணிகளுக்காக ரிசர்வ் வங்கி மூலம் பத்திரங்களை வெளியீடு செய்து நிதி திரட்டும்.
உதாரணமாக அரசு 100 ரூபாய் ஃபேஸ் வேல்யூ கொண்ட பத்திரங்களை வெளியீடு செய்கிறது என வைத்துக் கொள்வோம். ரிசர்வ் வங்கி தள்ளுபடி விலையில் இதனை மக்களுக்கு வழங்கும். அதாவது 96 ரூபாய், 97 ரூபாய் என நாம் வாங்கலாம். அரசு நமக்கு முதிர்வின் போது 100 ரூபாயாகவும் , உடன் கணிசமான வட்டியையும் சேர்த்து வழங்கும்.
எனவே 100 ரூபாய் கொண்ட பத்திரத்தை 96 ரூபாய்கு வாங்கினால் நமக்கு 4 ரூபாய் லாபம், அத்துடன் வட்டி வருமானமும் கிடைக்கும். இந்த முதலீட்டினை பொருத்தவரை உங்களுடைய பணம் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறது என்பதோடு மட்டும் இல்லாமல் உங்களுக்கு அதில் எவ்வளவு வருமானம் கிடைக்கும் அது எப்போது கிடைக்கும் என்ற ஒரு தெளிவான பார்வையும் இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகளைப் போல ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்காது.
இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மக்கள் பதிவு செய்து கொண்டு அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய முடியும். பத்திரம் முதிர்ச்சி அடையும் முன்னர் பங்குச்சந்தையிலும் கூட அதனை விற்பனை செய்யலாம்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications