எப்படி முதலீடு செய்ய வேண்டும்? – 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிய திருவள்ளுவர்..!!

திருக்குறள் உலகப் பொதுமறை என்ற பெயருக்கு பொருத்தமான ஒரு தமிழ் இலக்கியம். திருக்குறள் நம் மனித வாழ்வின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு வாழ்வியல் வழிகாட்டி என கூறலாம். திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் யாவும் எக்காலத்துக்கும் பொருந்துபவையாக இருக்கின்றன.

திருக்குறளில் பர்சனல் பைனான்ஸ் எனப்படும் தனிப்பட்ட நிதி மேலாண்மைக்கான பல்வேறு குறள்களும் கூட இடம் பெற்றிருக்கின்றன. Freefincal என்ற இணைய பக்கத்தில் ஸ்ரீவட்சன் என்பவர் திருக்குறள் மற்றும் அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நிதி மேலாண்மை குறித்து பதிவு செய்துள்ளார். அதை தான் நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம். முதலில் அடிப்படை என்ற தலைப்பில் அவர் சில குறள்களை குறிப்பிட்டுள்ளார்.

எப்படி முதலீடு செய்ய வேண்டும்? – 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிய திருவள்ளுவர்..!!

1. அடிப்படை - இன்று இணைய உலகில் நமக்கு பலரும் முதலீடு சார்ந்த அறிவுரைகளை வழங்குகின்றனர். ஆனால் அவர்களின் நோக்கம் என்ன என்பதை ஆய்வு செய்து நமக்கு பொருத்தமானதை தேர்வு செய்து கற்க வேண்டும் என்பதை குறிப்பிடும் திருக்குறள்கள் இவை.

குறள்: கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

பொருள்: கற்பதற்குத் தகுதியான நூல்களைப் பழுதில்லாமல் கற்க வேண்டும்; கற்றதன் பின்னர் கற்ற அக்கல்வியின் தகுதிக்குத் தகுந்தபடி நடக்கவும் வேண்டும்.

குறள்: எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

பொருள் : எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்

குறள்: செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.

பொருள் : செயலைச் செய்யும் முறைகளை நூலறிவால் அறிந்திருந்த போதும், அதனை உலகத்தின் இயற்கையையும் அறிந்து அதற்கேற்றபடியே முறையாகச் செய்ய வேண்டும்.

குறள்: சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

பொருள்: நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்

குறள்: மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்

பொருள் : மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்

2. முதலீட்டுக்கான தத்துவம்- எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்ற வாக்குறுதி இருந்தாலும் நமது மூலதனத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் இருந்தால் அந்த ரிஸ்க்கை எடுக்க கூடாது. அதற்கு உதாரணமாக அவர் கூறும் திருக்குறள்.

குறள்: ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.

பொருள்: வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.

3. தனிப்பட்ட நிதி என்ற தலைப்பில் கோல்டன் ரூல் என்ற பெயரில் அவர் குறிப்பிட்டுள்ள குறள் இது.

குறள்: ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை

பொருள்: வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.

4. இலக்கை நிர்ணயித்து செயல்படுவது என்ற தலைப்பில் நாம் முதலீடு, சேமிப்பு என எதை தொடங்கினாலும் எப்படி சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதை விவரிக்கும் குறள்.

குறள்: பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்

பொருள்: ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது தனக்கும் தன் எதிரிக்கும் இருக்கும் செல்வம், சாதனங்கள், ஏற்ற காலம், செயல்திறம், பொருத்தமான இடம் ஆகிய ஐந்தையும் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சிந்தித்துச் செய்க.

5. சொத்து ஒதுக்கீடு - அதாவது முதலீடு என வரும் போது நாம் தங்கம், நிலம், பங்குச்சந்தை என பல வகைகளில் முதலீடு செய்வோம். அதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை விளக்கும் குறள்.

குறள்: குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

பொருள்: ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனை பதவிக்குத் தேர்வு செய்யவேண்டும்

6. காப்பீடு - நாம் அனைவருமே கட்டாயம் மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு உள்ளிட்டவற்றை எடுக்க வேண்டும் என்பதை உணர்த்தும் குறள்.

குறள்: எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.

பொருள்: நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.

7. ஆலோசகரை தேர்வு செய்வது- முதலீடு என வரும் போது சரியான ஆலோசகரை தேர்வு செய்வதன் அவசியத்தை விவரிக்கும் குறள்.

குறள்: இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

பொருள்: ஒரு காரியத்தை ஒருவர் எப்படிச் செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

8. முயற்சி - முதலீடு, சேமிப்பு குறித்த அனைத்தையும் தெரிந்து கொண்டும் முயற்சி செய்யாமல் இருப்பது தவறு என்பதை விவரிக்கும் குறள்.

குறள்: முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

பொருள் : முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.

குறள் :சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது

பொருள்: ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும் முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும்.

நிதி மேலாண்மை, முதலீடு, சேமிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படை அறிவை எப்படி வளர்த்து கொள்ள வேண்டும், எப்படி அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும், யாரிடம் இருந்து அவற்றை கற்றுக் கொள்ள வேண்டும், கற்றுக் கொண்டதை எப்படி செயல்படுத்த வேண்டும், காப்பீடு ஏன் அவசியம் என பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் மூலம் எழுதி வைத்திருக்கிறார் திருவள்ளுவர். அவற்றை சரியாக பின்பற்றினால் நாம் எளிதாக செல்வம் சேர்த்துவிட முடியும் என்பதே இந்த திருக்குறள்கள் நமக்கு உணர்த்தும் பொருள். எனவே சரியான ஆதாரங்களை தேர்வு செய்து தெளிவாக படித்து புரிந்து கொண்டு நிதி மேலாண்மை செய்யும் போது வெற்றி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

சுமார் 7,000 வருடங்கள் வரை, இந்தியா உலகிலேயே மிகவும் வளமான நாடாக இருந்தது. ஆனால், கடந்த 300 ஆண்டுகளில் மட்டும், நாம் ஏழை நாடாக மாறிவிட்டோம். அப்படியானால், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் ஏதோ சரியான விஷயங்களைச் செய்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில், அரசியல் கொள்கைகள் எதுவாக இருந்தாலும், தனியார் பள்ளியாக இருந்தாலும் சரி, அரசுப் பள்ளியாக இருந்தாலும் சரி, சென்னை போன்ற நகர்ப்புறமாக இருந்தாலும் சரி, தூக்கணாம்பாளையம் போன்ற கிராமப்புறமாக இருந்தாலும் சரி, ஒரு பொதுவான பாடநூல் கட்டாயமாக கற்பிக்கப்படுகிறது. அதுதான் திருக்குறள். குழந்தைகள் அதனை மனப்பாடம் செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில், திருக்குறளைப் பார்க்காமலோ, கேட்காமலோ ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. நகரப் பேருந்துகளில், மெட்ரோ ரயில் நிலையங்களில், பற்பசைகளில், தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சிகளில், அரசியல் பேரணிகளில் என எங்கு பார்த்தாலும் திருக்குறள் தான். இப்படி தமிழ் மக்களின் அன்றாட வாழ்வில் ஊடுருவியிருக்கும் திருக்குறள், இந்தியாவின் 7000 ஆண்டுகால செல்வத்திற்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது என்றால் வியப்பாக தான் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+