தைரோகேர் நிறுவனர் டாக்டர் வேலுமணி தன்னுடைய சமூக வலைதள பக்கமான எக்ஸ் பக்கத்தில் தொழில் ரீதியான அனுபவங்கள் குறித்தும், எப்படி பணம் செலவு செய்யப்பட வேண்டும், எப்படி சிக்கனமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது குறித்தும் அவ்வப்போது பதிவிடுவார். அந்த வகையில் அண்மையில் அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு பதிவு ஆயிரக்கணக்கானவர்களின் பார்வையை பெற்றிருக்கிறது.
தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் டாக்டர் வேலுமணி ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் கஷ்டப்பட்டு நீங்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்தை எப்படி செலவு செய்கிறீர்கள் என்பதை முதலில் கண்காணியுங்கள் என கூறப்பட்டுள்ளது. எந்த ஒரு யோசனையும் இல்லாமல் தினந்தோறும் பணத்தை வீணாக செலவு செய்கிறீர்களா என்பதை முதலில் கவனியுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பொருளை வாங்க வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்பட்டு அதனை நீங்கள் வாங்க முன் வருகிறீர்கள் என்றால் அதனை வாங்குவதற்கு முன்பாக அந்த பொருளின் மதிப்பு என்ன நிச்சயமாக இது நமக்கு உதவுமா இது நமக்கு முக்கியமா என்பதை ஆய்வு செய்யுங்கள் என கூறி இருக்கிறார். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய பொறுப்பு என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த படத்தை பகிர்ந்திருக்கும் தைரோகேர் டாக்டர் வேலுமணி பணக்காரர் ஆகட்டும் ஏழை ஆகட்டும் இந்த இரண்டிலுமே இரண்டு வகையான மக்களை தான் நாம் காண முடியும் என கூறி இருக்கிறார். முதலில் உடல் ஆரோக்கியம் என வரும்போது இரண்டு வகையான மக்கள் இருக்கின்றனர் என தெரிவித்துள்ளார். ஒரு வகையான மக்கள் பசி எடுக்கும் போது மட்டுமே உண்பார்கள் , குடலுக்காக மட்டுமே உண்பார்கள், இதனால் அவர்கள் தொடர்ந்து ஆரோக்கியமாகவும் நல்ல உடல்வாகுடனும் இருப்பார்கள் என கூறியுள்ளார்.
மற்றொரு வகையினர் எங்கு பார்த்தாலும் எப்பொழுது பார்த்தாலும் எந்த உணவை பார்த்தாலும் உடனடியாக வாங்கி சாப்பிடுவார்கள், நாவின் சுவைக்காக சாப்பிடக்கூடியவர்கள் அவர்கள், எதைப் பார்த்தாலும் அவர்களுக்கு சாப்பிட வேண்டும் என்ற ஒரு உந்துதல் ஏற்படும் ஆனால் இவர்கள் கூடிய விரைவில் உடல் நலம் பாதிக்கப்படுவார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே போல தான் செல்வம் என வரும்போதும் இரண்டு வகையான மக்கள் இருக்கிறார்கள் ஒருவகையினர் தேவையான விஷயங்களுக்கு மட்டும் பணத்தை செலவு செய்வது அடிப்படை தேவைகளுக்கு செலவு செய்வது என தன்னுடைய பணத்தை சரியாக திட்டமிட்டு செலவு செய்து படிப்படியாக பணக்காரராக வளர்ந்து வருவார்கள் என கூறியுள்ளார்.
மற்றொரு வகையினர் இருக்கிறார்கள் அவர்கள் எதை பார்த்தாலும் வாங்குவார்கள் எந்த ஒரு புது விஷயத்தை பார்த்தாலும் உடனடியாக வாங்கிவிட வேண்டும் என்ற உந்துதல் அவர்களுக்கு ஏற்படும் அவர்கள் இவ்வாறு கண்ட விஷயங்களுக்கு எல்லாம் பணத்தை செலவு செய்து கூடிய விரைவில் பிச்சைக்காரர்கள் ஆகிவிடுவார்கள் என தெரிவித்திருக்கிறார். எனவே எந்த ஒரு விஷயத்தாலும் நீங்கள் தூண்டப்பட கூடாது அந்த குணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள் என யோசனை தெரிவித்து இருக்கிறார். இவருடைய இந்த பதிவு ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications