வங்கிகளில் வழங்கப்படும் லோன்களை நம்பி தான் இன்று பெரும்பாலான குடும்பங்கள் இயங்கி வருகின்றன. ஹோம் லோன், கார் லோன் என நம்முடைய தனித்தனி தேவைகளுக்கு ஏற்றார் போல் லோன் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வங்கியை அணுகும் போது அவர்கள் முதலில் நம்முடைய கிரெடிட் ஸ்கோரை தான் சரி பார்ப்பார்கள். கிரெடிட் ஸ்கோர் நல்லபடியாக இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை, உடனே லோன் கிடைக்கும். அதுவே குறைவாக இருந்துவிட்டால் பல சிக்கல்கள் ஏற்படும். இந்தப் பதிவில் கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?, நீங்கள் செய்யும் சிறு தவறு உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை எப்படி பாதிக்கிறது? கிரெடிட் ஸ்கோருக்கும் லோனுக்கும் என்ன சம்பந்தம்? என்ற விவரங்களைப் பார்ப்போம்.
கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?: கிரெடிட் ஸ்கோர் என்பது 3 எழுத்து நம்பர் அவ்வளவுதான். இந்த நம்பர் ஒவ்வொரு தனி நபருக்கும் வழங்கப்பட்டிருக்கும். இதை வைத்து தான் உங்களுடைய நிதி நிலை அறியப்படும். உதாரணமாக நீங்கள் ஏற்கனவே கடன் வாங்கி இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் கடனை நீங்கள் எப்படி செலுத்தி இருக்கிறீர்கள்?, சரியான டைமுக்கு செலுத்தி இருக்கிறீர்களா? அல்லது தாமதமாக செலுத்தி இருக்கிறீர்களா?, நீங்கள் கடனை செலுத்திய தேதி, தொடர்ந்து கடன் வாங்கிக் கொண்டே இருக்கிறீர்களா? என்ற பல விபரங்களை வங்கிகள் தெரிந்து கொண்டுவிடும்.
இந்த கிரெடிட் ஸ்கோர் 600 முதல் 900 வரையில் இருக்கும். உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் 900-த்திற்கும் மேலிருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. வங்கிகள் தாராளமாக கடன் தர முன்வரும். அதுவே உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் 600-க்கும் கீழிருந்தால் நீங்கள் நல்ல நிதி நடத்தை உடையவராக வங்கிகள் கருதாது. எனவே கடன் பெற்றால், அந்த கடனை சரிவர செலுத்தினால் மட்டுமே உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருக்கும்.

கிரெடிட் கார்டு: கிரெடிட் கார்டு இன்று பலருக்கும் உதவும் உற்ற நண்பனாக மாறிவிட்டது. அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் வாங்கிய கடனை சரியான நேரத்தில் செலுத்துவது தான் முக்கியம். கிரெடிட் கார்டு டியூ டேட் ஒருநாள் தள்ளி போனாலும் அதுவும் லேட்டு தான். ஒரு முறை இது போன்ற தவறு நடந்தால் பரவாயில்லை. ஆனால் மறுமுறையும் இதே போன்று தள்ளிப்போட்டு பணம் செலுத்துவதால் சிபில் ஸ்கோர் குறைய தொடங்கும். அதிலும் சிலர் இரண்டுக்கும் மேற்பட்ட கார்டுகளை வைத்திருப்பார்கள். எனவே சரியான தேதியில் கிரெடிட் கார்டு பில்லை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அதற்கும் வட்டி ஏறிக்கொண்டே செல்லும். மேலும் சிபில் ஸ்கோர் குறைந்து பிற்காலத்தில் கடன் பெற முடியாமல் போகலாம்.
கிரெடிட் லிமிட்: வங்கிகள் ஒவ்வொருவருக்கும் இவ்வளவு கிரெடிட் லிமிட் வழங்கலாம் என்ற அளவை நிர்ணயித்திருக்கும். இது உங்களுடைய அக்கவுண்டில் நடக்கும் பரிவர்த்தனையை பொறுத்தது. நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு மாத சம்பளம் பெறுபவராக இருந்தால் வங்கிகள் தாமாக முன்வந்து கிரெடிட் கார்டுகளை வழங்க முயற்சிக்கும். இப்படி ஒரு சில விஷயங்களைக் கருத்தில் கொண்டு கிரெடிட் லிமிட் தீர்மானிக்கப்படும். அப்படி ஒருவருக்கு ரூ.1 லட்ச ரூபாய் லிமிட் இருக்கிறது எஎன்று வைத்துக் கொள்வோம். அவர் அதில் ரூ.90,000 வரை செலவு செய்கிறார். ஆனால் அதை சரியான நேரத்தில் கட்டி விடுகிறார். இப்பொழுது அவருக்கு கிரெடிட் ஸ்கோர் ஏறும் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை.
வங்கிகளை பொறுத்தவரை கிரெடிட் யூட்டிலிசேஷன் ரேஷியோ என்ற அளவுகோலை பயன்படுத்துகின்றனர். அதாவது உங்களுக்கு கொடுத்திருக்கும் லிமிட்டில் நீங்கள் எவ்வளவு பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்பதை இதை வைத்து தெரிந்து கொள்வார்கள். உங்கள் கிரெடிட் லிமிட் 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதத்திற்குள் இருந்தால், நீங்கள் நல்ல நிதிநடத்தை உடையவராக வங்கிகள் கருதும். அதுவே 70 சதவீதம் வரையில் நீங்கள் லிமிட்டை பயன்படுத்தி செலவு செய்தால் வங்கிகளுக்கு உங்கள் மீது சந்தேகம் வரும். இதனாலும் கிரெடிட் ஸ்கோர் குறைய வாய்ப்புள்ளது.
பல லோனுக்கு விண்ணப்பிப்பது: அவசர காலங்களில் ஒருவர் செய்யும் மிகப்பெரிய தவறு இதுதான். திடீரென ஏற்படும் பணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு சிலர் 4, 5 வங்கிகளில் லோன் பெற விண்ணப்பிப்பார்கள். அதிலும் தற்போது லோன் அப்ளிகேஷன்கள் அதிகரித்துவிட்டது. சிலர் வீட்டில் இருந்தே விண்ணப்பித்து வைத்திருப்பார்கள். விண்ணப்பிப்பவரை சொல்லி தவறில்லை. அவருடைய சூழ்நிலையால் ஏதாவது ஒரு லோன் கிடைத்து விடாதா? என்ற எண்ணத்தில் விண்ணப்பித்திருப்பார். ஆனால் இதுவும் கிரெடிட் ஸ்கோரை குறைக்கும். இதை ஆங்கிலத்தில் "ஹார்ட் என்குயரி" என்று கூறுவார்கள். அதாவது குறுகிய காலத்தில் அடுத்தடுத்து பல லோன்களுக்கு விண்ணப்பிப்பது. இதனாலும் ஸ்கோர் குறையத் தொடங்கும்.
பயன்படுத்தாத கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்வது: சிலர் அவசரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டை வாங்கி விடுவார்கள். ஆனால் வாங்கிய பிறகு என்ன செய்வது என்றே தெரியாது. இதனால் ஒன்றை க்ளோஸ் செய்து விடுவார்கள். இப்படி செய்வது நன்மை என்று தானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. ஒரு வங்கி 2,3 கிரெடிட் கார்டை வழங்குகிறது என்றால் கண்டிப்பாக அந்த நபருக்கு அதிக கிரெடிட் லிமிட் இருக்கும். ஒரு கிரெடிட் கார்டுக்கு ரூ.1 லட்சம், மற்றொரு கிரெடிட் கார்டுக்கு இன்னொரு ரூ.1 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். இரண்டையும் சேர்த்தால் ரூ.2 லட்சம் கிரெடிட் லிமிட் இருக்கும். இதை பயன்படுத்தியே ஒருவர் மாதா மாதம் செலவு செய்து வருகிறார். மறு மாதம் ஒரு கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்து விடுகிறார் என்றால் மீதமுள்ள ஒரே ஒரு கிரெடிட் கார்டில் 30 சதவீத கிரெடிட் யூட்டிலிசேஷன் ரேஷியோ இருக்கிறதா? என்பதை வங்கிகள் கவனிக்கும்.
எளிமையாக சொல்ல வேண்டுமானால் ஒரு கார்டை க்ளோஸ் செய்வதற்கு முந்தைய மாதத்தில், 2 கார்டையும் சேர்த்து செலவு செய்து வருவீர்கள். மறு மாதம் ஒரு கார்டை க்ளோஸ் செய்து விட்டால் ஒரே ஒரு கார்டில் மட்டும் செலவு செய்ய வேண்டி வரும். அப்போது அதிக பணத்தை செலவு செய்யும் சூழலில் இந்த கிரெடிட்யூட்டிலிசேஷன் ரேஷியோ அதிகமாகும். அதாவது 30 சதவீதத்திலிருந்து 50 முதல் 60 சதவீதமாக உயரும். இதுவும் கிரெடிட் ஸ்கோர் குறைய ஒரு காரணம்.
எனவே கிரெடிட் கார்டு பெற விண்ணப்பிக்கும் போது, இது போன்ற விஷயங்களையும் கருத்தில் கொள்ளுங்கள். அப்போது தான் பிற்காலத்தில் லோன் பெறும்போது எந்த இடையூறும் வராமல் இருக்கும்.


Click it and Unblock the Notifications