இந்த காலகட்டத்தில் கல்வி மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு கற்று தர வேண்டிய மற்றொரு விஷயம் நிதி ஒழுக்கம். தனிநபர் நிதி மேலாண்மையை சிறு வயதில் இருந்தே பழக்கமாக்கிவிட்டால் பின்னாளில் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும். குழந்தைகளுக்கு அம்மாக்கள் எப்படி நிதி ஒழுக்கத்தை கற்று தரலாம் என இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு சிறு வயது முதலே பணம் எப்படி வருகிறது,அதை எதற்காக செலவிடுகிறோம் என்பன உள்ளிட்டவற்றை புரிய வைக்க வேண்டும். தாய் என வரும் போது குழந்தைகளுக்கு புரியும் வகையிலும் அவர்களின் மொழியிலும் எளிமையாக கற்பித்து விடலாம்.

பட்ஜெட் போடுவது, நிதி மேலாண்மை, சேமிப்பு , முதலீடு , கடன்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையை அம்மாக்கள் வீட்டில் இருந்தே செய்முறை மூலமாகவே விளக்கலாம். எனவே வேலைக்கு செல்லும் போதோ அல்லது தொழில் புரியும் போதோ நிதி சிக்கலில் சிக்காமல் அவர்கள் தப்பித்து கொள்வார்கள். மேலும் சிறந்த திட்டமிடலுடன் எதையும் அணுகும் ஒரு பழக்கம் வரும்.
அடிப்படை விளக்கம்:
பணம் என்றால் என்ன, அதனை எப்படி சம்பாதிக்கிறோம், அதனை எப்படி செலவு செய்கிறோம், சேமிப்பு ,முதலீடு என்றால் என்ன என்பது குறித்து குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பணத்தை வழங்கி அதனை கணக்கிட்டு திட்டமிட்டு செலவிட செய்வது உள்ளிட்டவை மூலம் இதனை செய்யலாம்.
செய்முறை:
உங்கள் குழந்தை ஒரு பொம்மை வாங்க வேண்டும் என ஆசைப்பட்டால், அதற்கு எவ்வளவு பணம் தேவை , அதனை எப்படி சேமித்து அந்த பொம்மையை வாங்க முடியும் என கற்றுத்தந்து, அவர்களையே அந்த சேமிப்பில் ஈடுபடுத்துங்கள்.
குழந்தைகளையும் ஈடுபடுத்துவது:
வீட்டிற்கான பட்ஜெட் திட்டமிடல், செலவுகள், விடுமுறை சுற்றுலா திட்டங்கள், வாடகை, மளிகை செலவு ஆகியவற்றை கணக்கிடும் போது குழந்தைகளையும் அதில் ஈடுபடுத்துங்கள். அப்போது அவர்களுக்கு நிதி சார்ந்த விஷயங்கள் இன்னும் எளிமையாக புரியும். ஒரு செலவு செய்யும் போது நம் குடும்ப வருமானத்துக்கு இது ஏற்றதா என்ற எண்ணம் தோன்றி தேவையற்ற செலவுகளை அவர்களே கைவிட்டு விடுவார்கள்.
இலக்கு:
குழந்தைகளுக்கு அடுத்த ஆண்டு சைக்கிள் வாங்குவது, பள்ளி கட்டணம் செலுத்துவது என்பன போன்ற இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கு ஏற்ப அவர்களை சேமிக்க வையுங்கள். அவர்களே சேமித்து அந்த பொருளை வாங்கும் போது அதன் மதிப்பு அதிகம் உணர்வார்கள். பணத்தை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதை குழந்தை பருவத்திலேயே விதைக்கும் பொறுப்பு அன்னையிடமே இருக்கிறது.


Click it and Unblock the Notifications