மாதச் சம்பளக்காரர்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை என்ன தெரியுமா? சம்பளம் கையில் கிடைத்த 10 நாட்களிலேயே அக்கவுண்டில் பணமிருக்காது. பிறகு அடுத்த மாதம் சம்பளம் எப்போது வரும்? என்று காத்திருக்கத் தொடங்கி விடுவார்கள். இப்படியே ஒவ்வொரு மாதமும் கடக்கத் தொடங்கும். ஒரு சில மாதங்களுக்கு வேண்டுமானால் இது வொர்க் அவுட் ஆகலாம். ஆனால் நீண்ட காலத்திற்கு ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு அங்கு சம்பளம் பெறுவதும், அது விரைவில் கரைந்து போவதுமாக இருந்தால் மனது சோர்வடைந்து விடும்.
ஒவ்வொரு சம்பளக்காரர்களுக்கும் செலவு பழக்க வழக்கம் என்பது மிக மிக முக்கியம். இந்தப் பதிவில் சம்பளம் பெறுபவர்கள் செய்யும் தவறு என்ன?, அதை எப்படி திருத்திக் கொள்வது? என்பதைப் பார்க்கப் போகிறோம்.
ஆன்லைன் தளங்கள்: ஆன்லைன் தளங்கள் அதிகரித்தது ஒரு புறம் நல்லதாக இருந்தாலும் தேவையின்றி ஷாப்பிங் செய்வதும் அதிகரித்துள்ளது. ஒரு சிலர் ஏன் ஆர்டர் செய்தோம் என்று தெரியாமலேயே ஆர்டர் செய்கின்றனர். இது போன்ற பழக்க வழக்கங்களும் உங்களுடைய நிதி நலனுக்கு நல்லதல்ல. எனவே அடிக்கடி ஆன்லைன் தளங்களில் உணவு ஆர்டர் செய்பவராக இருந்தால் அதை வாரத்திற்கு ஒரு முறை செய்யத் தொடங்குங்கள். ஹோல் சேல் கடைகளில் மளிகை பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். இதனால் குறிப்பிட்ட தொகை மிச்சமாகும்.

மந்த்லி சப்ஸ்கிரிப்ஷன்: இன்றெல்லாம் 9 டூ 5 ஜாப் செல்பவர்கள் ஒரு படம் பார்க்கவேண்டும் என்றாலும் உடனே மாத சந்தாக்களுக்கு பணம் செலுத்தி விடுகின்றனர். அதன் பிறகு அப்படியே மறந்து விட்டுவிடுகின்றனர். இதுபோன்ற சந்தாக்களுக்கு மாதம் மாதம் ஆட்டோமேட்டிக் பேமெண்ட் சென்றுக் கொண்டிருக்கும். இதனால் உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் அக்கவுண்டில் இருந்து பணம் கரையும் வாய்ப்புள்ளது. நீங்களும் சந்தாக்களுக்கு பணம் செலுத்தி இருந்தால் ஆட்டோ பே ஆப்ஷனை கேன்சல் செய்யுங்கள். தேவைப்பட்டால் அவ்வப்போது பணம் செலுத்தி கொள்ளுங்கள்.
பட்ஜெட்: ஒவ்வொரு மாதமும் சம்பளம் கைக்கு வருவதற்கு முன்பு பட்ஜெட் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் என்னென்ன விஷயங்களுக்கு செலவு செய்யப் போகிறீர்கள்? என்பதை தெளிவாக எழுதிக் கொள்ளுங்கள். எழுதியதோடு விட்டுவிடாமல் மறுமுறை அதை பார்த்து தேவையற்ற செலவுகள் இருக்கிறதா? என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். பட்ஜெட் போட்டுக் கொண்டு அதற்கு ஏற்றார் போல் செலவு செய்தால் பணம் வீண் விரையம் ஆவதைத் தடுக்க முடியும். சிலர் பட்ஜெட் எல்லாம் கரெக்டாக போட்டு விடுவார்கள். ஆனால் அதன்படி நடக்க மாட்டார்கள். அப்படி இருப்பதும் நல்லதல்ல.
சேமிப்பிற்கு என்றே சில விதிகள் உள்ளன. இது போன்ற விதிகளைப் பயன்படுத்தலாம். அதில் முக்கியமாக 50/30/20 என்ற விதி இருக்கிறது. அதாவது உங்களுடைய சம்பளத்தில் 50 சதவீதத்தை வாடகை மற்றும் பிற அத்தியாவசிய தேவைக்காக பயன்படுத்த வேண்டும். 30 சதவீதத்தை உடை அல்லது உங்களுக்கு பிடித்தமான மற்ற விஷயங்களுக்கு செலவிடலாம். மீதமுள்ள 20 சதவீதத்தை கண்டிப்பாக சேமித்தாக வேண்டும். அது அவசர கால நிதியாக இருக்கலாம் அல்லது உங்களுடைய சேமிப்பாக இருக்கலாம்.
கிரெடிட் கார்டு லோன்: அதிக வட்டி விகிதங்களில் நீங்கள் கிரெடிட் கார்டு பெற்றிருந்தால் கண்டிப்பாக அதை திருப்பிச் செலுத்துவதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வெறும் மினிமம் டியூ அமௌண்டை மட்டும் செலுத்திக்கொண்டே வந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை. மீதமுள்ள தொகைக்கு கண்டிப்பாக வங்கிகள் வட்டி வசூலிக்க தொடங்கிவிடும். கிரெடிட் கார்டு லோன்களுக்கு 42 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படுகிறது. இதை கணக்கிட்டு பார்த்தால் தலையே சுற்றிவிடும். எனவே சேமிப்பிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ? அதே அளவுக்கு இது போன்ற வட்டி அதிகம் உள்ள கடன்களுக்கும் முன்னுரிமை தர வேண்டும்.
சக மனிதர்களின் செயல்: இன்றைய ஜென் Z தலைமுறையினரில் பெரும்பாலானோர் என்ன செய்கின்றனர் தெரியுமா? அவர்களோடு இருக்கும் பிறர் செய்யும் விஷயங்களுக்காக அதிகம் செலவு செய்கின்றனர். உதாரணமாக யாரோ ஒருவர் சோசியல் மீடியா தளங்களில் பிரபலமாகும் பொருட்களை விளம்பரம் செய்கிறார் என்றால், அதை பார்த்து தேவையே இல்லாத பட்சத்திலும் அதை வாங்குகின்றனர். இது போன்ற விஷயங்களை சற்று ஆராய்ந்து நமக்கு உண்மையில் அந்த பொருள் தேவைப்படுகிறதா? என்பதை தெரிந்து கொண்டு வாங்கலாம். இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினாலே மாதத்தின் பத்தாம் தேதிக்குள் சம்பளம் கரையாமல் பார்த்துக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications