புதிய நிதியாண்டு பிறக்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், ஏப்ரல் 1 முதல் உங்கள் ஏடிஎம் பயன்பாட்டில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. கார்டு இல்லை என்றாலும் கவலை இல்லை என்று நாம் ஜாலியாக பயன்படுத்திய UPI ஏடிஎம் விதிகள் முதல், ஒரு நாளில் எடுக்கக்கூடிய பண வரம்பு வரை பல அதிரடி திருத்தங்களை வங்கிகள் மேற்கொண்டுள்ளன.
HDFC, PNB மற்றும் பந்தன் வங்கி போன்ற முன்னணி வங்கிகள் ஏற்கனவே, இந்த ஏப்ரல் 1 முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்த மாற்றங்கள் உங்கள் பாக்கெட்டை பதம் பார்க்காமல் இருக்க வேண்டுமானால், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அந்த முக்கியமான அம்சங்கள் என்னென்ன? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், ஏடிஎம் (ATM) பயன்பாட்டில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வங்கிகள் திட்டமிட்டுள்ளன. முன்னணி வங்கிகள் மற்றும் பேமெண்ட் வங்கிகள் அறிவித்துள்ள இந்த மாற்றங்கள், பணம் எடுக்கும் வரம்பு, பரிவர்த்தனை கட்டணங்கள் மற்றும் பணத்தை பெறும் முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
HDFC வங்கியின் புதிய நடைமுறை:
தனியார் துறையை சேர்ந்த HDFC வங்கி, இனி ஏடிஎம்களில் UPI மூலம் எடுக்கப்படும் பணமும், மாதாந்திர இலவச பரிவர்த்தனை கணக்கில் சேர்க்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு இது தனிப்பிரிவாக கருதப்பட்ட நிலையில், இனிமேல் இதுவும் உங்கள் மொத்த இலவசப் பரிவர்த்தனை எண்ணிக்கைக்குள்ளேயே அடங்கும். இதனால் மாதாந்திர இலவசப் பரிவர்த்தனை வரம்பைத் தாண்டி பணம் எடுக்கும் போது, ஒரு பரிவர்த்தனைக்கு 23+ வரி சேர்த்து கட்டணமாக வசூலிக்கப்படும்.
தற்போதைய சூழலில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஏடிஎம்களில் 5 முறை இலவசமாகவும், மற்ற வங்கி ஏடிஎம்களில் மெட்ரோ நகரங்களில் 3 முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 முறையும் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ள அனுமதி உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி மாற்றம்:
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, குறிப்பிட்ட டெபிட் கார்டுகளுக்கான தினசரி பணம் எடுக்கும் வரம்பை மாற்றியமைத்துள்ளது. புதிய விதிகளின்படி, கார்டு வகையை பொறுத்து வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 50,000 முதல் 75,000 ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும். முன்னதாக 1,00,000 ரூபாய் வரை எடுக்க அனுமதி இருந்த சில கார்டுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த வரம்பானது குறைக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு மற்றும் முறையான பயன்பாட்டை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.
ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி:
ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி, புதிய QR கோட் மூலம் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட வங்கி முகவர்களிடம் சென்று, UPI ஆப் மூலம் QR கோடை ஸ்கேன் செய்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த மாற்றங்கள் டிஜிட்டல் வங்கி முறையை ஊக்குவிப்பதோடு, ரொக்க பயன்பாட்டை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. தேவையற்ற கூடுதல் கட்டணங்களை தவிர்க்க, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியின் புதிய வரம்புகளை சரிபார்த்து, பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது அவசியமாகும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications