ஸ்விக்கி, சோமேட்டோ, ஓலா, உபர் மற்றும் பிற ஆன்லைன் தளங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் கிக் தொழிலாளர்களுக்காகவே புதிய சேமிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெரு நிறுவனங்களில் பணிபுரிபவர்களும், மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களும் சேமித்து வந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இனி கிக் தொழிலாளர்களும் இணையலாம். அதற்காக "NPS e-Shramik" என்ற புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் யாரெல்லாம் இணையலாம்?, எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? என்ற விபரங்களைப் பார்ப்போம்.
NPS e-Shramik திட்டத்தின் மூலம் நிரந்தர பணியில் இல்லாத ஊழியர்கள் தங்களுடைய எதிர்காலத்திற்கு சேமித்து, ஓய்வு காலத்தை யாரிடமும் கையேந்தாமல் கழிக்க முடியும். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) 2025-ஆம் ஆண்டின் அக்டோபர் 20-ஆம் தேதி அன்று இந்தப் புதிய திட்டத்தைத் தொடங்கியது.

வழக்கமாக மாதச் சம்பளக்காரர்கள் மட்டுமே சேமித்து வந்த என்பிஎஸ் திட்டங்களில் இனி கிக் தொழிலாளர்களும் சேமிக்க முடியும். நிரந்தர ஊழியர்களுக்கு இருக்கும் சலுகைகளைப் போல நிறுவனங்களுக்கு வெளியில் இருந்து பணி புரியும் கிக் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. நிரந்தர ஊழியர்களுக்கு PF, அடல் பென்ஷன் யோஜனா போன்ற பல திட்டங்கள் இருக்கிறது.
அனால் கிக் பணியாளர்களுக்கு நிலையான வருமானம் தரக்கூடிய பாதுகாப்பான திட்டங்கள் எதுவும் இல்லை. இதை சரி செய்வதற்காகத்தான் NPS e-Shramik திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
எப்படி முதலீடு செய்ய வேண்டும்?: ஒரு சில சேமிப்பு திட்டங்களில் சேமிக்க வேண்டுமானால் அதற்கு நிலையான தொகையை தொடர்ந்து வரவு வைக்க வேண்டும். ஆனால் கிக் தொழிலாளர்களாக இருப்பதால் அவர்களுக்கு இத்தகைய சேமிப்பு சாத்தியமில்லை.
இவர்களுக்கு.. அவர்கள் செய்யும் வேலையைப் பொறுத்தே சம்பளம் கிடைக்கும். எனவே அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம். ஒரு மாதம் அதிகபட்ச தொகை மறு மாதம் குறைந்தபட்ச தொகை என கிடைக்கும் வருமானத்திற்கு ஏற்ப ஓய்வூதிய நிதியை உருவாக்கலாம். இதன் சிறப்பம்சம் என்ன தெரியுமா?
தொழிலாளர்கள் குறைந்தது 99 ரூபாய் முதல் முதலீடு செய்து சேமிக்க தொடங்கலாம். வருமானத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஊழியரும் சேமிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய வசதியை அரசு வழங்கியுள்ளது. ஒரு சில மாதங்களில் நிறைய டெலிவரி கிடைக்கும். அந்த மாதத்தில் அதிக சம்பளத்தை பெறும்போது நீங்கள் அதிகமான தொகையை வரவு வைக்கலாம். அதுவே ஒரு மாதத்தில் குறைவான வருமானம் கிடைக்கும்போது குறைந்த தொகையையும் சேமிக்கலாம்.
யார் தொகையை செலுத்த வேண்டும்?: தொழிலாளர்கள் தாங்களாகவும் பணம் செலுத்தலாம் அல்லது அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மூலமாகவும் பணம் செலுத்தலாம் அல்லது இருவரும் சேர்ந்து பேசி தங்களுக்குள் முடிவு செய்து முதலீட்டு முறையை தேர்வு செய்யலாம்.
ஒவ்வொரு தொழிலாளரும் சேமிக்கும் பணம் அரசு பத்திரங்கள் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. உங்களுக்கு 60 வயது ஆனவுடன் சேமித்த பணத்திலிருந்து மொத்தமாக ஒரு பகுதியை பெறலாம். மீதி தொகையை மாதா மாதம் ஓய்வூதியமாகப் பெற முடியும்.


Click it and Unblock the Notifications
