ஜியான்சு: பொதுவாக திவால் நடைமுறை என்றால் வீடு, வாகனம் ,நிறுவனம், உள்ளிட்டவை தான் ஏலம் விடப்படும். ஆனால் சீனாவில் சற்றே வினோதமான பொருள் ஏலம் விடப்பட்டுள்ளது. சீனாவில் திவால் அடைந்த பெரும் பணக்காரர் ஒருவருக்கு சொந்தமான ஒரு சொத்து ஏலத்தில் விடப்பட்டு தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
பொதுவாக ஒரு நபரோ அல்லது நிறுவனமோ திவால் ஆகிவிட்டால் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் அல்லது அந்த நபருக்கு சொந்தமான சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டு கடன்கள் அடைக்கப்படும்.

அந்த வகையில் சீனாவில் திவாலான பணக்காரரின் சொத்து நீதிமன்றம் மூலமாக ஏலத்தில் விடப்பட்டது. அது வெறும் 70 ரூபாய் மதிப்புள்ள ஒரு ஸ்பிரைட் பாட்டில் என்பது தான் மக்களின் கோபத்திற்கு காரணம்.
ஜியான்சு மாகாணத்தின் உள்ள தியாஃபெங் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு திவால் வழக்கு விசாரணைக்கு வந்தது. சென் என்ற நபர் பயோடெக்னாலஜி நிறுவனம் வைத்து நடத்தி வந்தவர். ஆனால் எதிர்பார்த்தபடி தொழில் செல்லவில்லை என நஷ்டமடைந்த அவர் கடன்களை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு சென்றார்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் திவால் நடைமுறைகள் தொடங்கப்பட்டன. அவருக்கு சொந்தமான சொத்துகள் ஏலம் விடப்பட்டன. அவருக்கு சொந்தமான ஒரு ஸ்பிரைட் பாட்டிலும் ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சீனாவில் ஒரு ஸ்பிரைட் பாட்டிலின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 70 ரூபாய் தான். அதை ஏல நடைமுறைக்கு கொண்டு வந்து ஆன்லைனில் விளம்பரம் செய்து அதற்காக நீதிமன்றத்தில் வழக்கு நடத்தியுள்ளனர். இது தான் தற்போது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஸ்பிரைட் பாட்டிலை 4.2 யுவானுக்கு ஏலம் அறிவித்துள்ளனர். இந்த பாட்டிலை ஏலத்தில் எடுப்பவர்கள் நேரடியாக வந்து தான் அதனை வாங்கிச் செல்ல வேண்டும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா சோசியல் மீடியாவில் மிகத் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் விஷயமாக இது இருக்கிறது.
இவ்வளவு பெரிய நீதித்துறை விசாரிக்க வேண்டிய வழக்குகள் ,மக்கள் பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய எவ்வளவோ வழக்குகள் இருக்கும்போது தங்களுடைய நேரத்தையும் பணத்தையும் இப்படி ஒரு ஸ்பிரைட் பாட்டிலை ஏலம் விடுவதற்காக ஏன் செலவிட வேண்டும் என பலரும் மிகக் கோபமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தியாஃபெங் மாவட்ட நீதிமன்றம் இதே போல மற்றொரு திவால் நடைமுறையின் போது சிறிய குவளை மற்றும் ஸ்க்ரூ டிரைவர் உள்ளிட்டவைகளை ஏலம் விட்டு இதேபோல சர்ச்சையில் சிக்கியது.
Written by: Devika


Click it and Unblock the Notifications