உலகம் முழுவதுமே எங்கு திரும்பினாலும் ஏஐ பற்றியும் ஊழியர்கள் பணிநீக்கம் பற்றியும் தான் அனைவரும் பேசி வருகின்றனர். 2025ஆம் ஆண்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மோசமான ஆண்டாகவே அமைந்திருக்கிறது.
உலகின் முன்னணி நிறுவனங்கள் முதல் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை ஊழியர்களை பணிநீக்கம் செய்வதை தொடர் கதையாக செய்து வருகின்றன. நாள்தோறும் ஒரு நிறுவனம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குகிறோம் என அறிவிக்கின்றன. கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

அந்த வகையில் ஜூன் மாதத்தில் மட்டும் 150 க்கும் அதிகமான அமெரிக்க நிறுவனங்கள் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை கையில் எடுத்திருக்கின்றன. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு டெக் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சாதகமானதாக அமையவில்லை. பல்வேறு அமெரிக்க நிறுவனங்களும் சிக்கன நடவடிக்கை உள்ளிடவற்றை காரணமாக கூறி பெரும் அளவில் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்த வண்ணம் இருக்கின்றன.
ஜூன் மாதத்தில் மட்டும் நியூஸ்வீக் தளம் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் பார்த்தால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்களுடைய வேலையை இழக்க உள்ளனர். கிட்டத்தட்ட 160 அமெரிக்க நிறுவனங்கள் இந்த மாதம் தங்களுடைய ஊழியர்களின் பணி நீக்கம் செய்ய இருப்பதாக அமெரிக்க அரசிடம் தகவல் தெரிவித்துள்ளன.
ஐடி மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களும் இந்த பணிநீக்க புயலில் சிக்கி வேலையை இழக்க உள்ளனர். ரீடெய்ல், மருந்து, உணவு மற்றும் பானங்கள், விமான போக்குவரத்து டெலிவரி, ஐடி என பல்வேறு துறை சார்ந்த ஊழியர்களும் இந்த பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என நியூஸ்வீக்கின் செய்தி குறிப்பிடுகிறது.
மருந்து உற்பத்தி நிறுவனமான ஃபைசர் , சில்லறை விற்பனை நிறுவனமான வால் மார்ட், நிதி நிறுவனமான ஜே பி மார்கன் என பெரிய நிறுவனங்கள் உட்பட 160 நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க இருக்கின்றன, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த இறக்குமதி வரிவிதிப்பு நடவடிக்கை மற்றும் ஏற்கனவே அமெரிக்காவில் நிலவக்கூடிய பொருளாதார மந்த நிலை ஆகிய இரண்டும் அமெரிக்காவில் செயல்படும் பல்வேறு நிறுவனங்களின் வருவாயை பாதித்திருக்கிறது.
இது ஒரு புறம் இருந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் மனிதர்களின் வேலைகளை பறிக்கத் தொடங்கி இருக்கிறது. எனவே நிறுவனங்கள் தங்களை மறுகட்டமைப்பு செய்வதாக அறிவித்து ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி வருகின்றன.


Click it and Unblock the Notifications