பிரிட்டன்: ஆயுள் காப்பீடு தொகை வேண்டும் என்பதற்காக ஒரு நபர் இறந்ததைப் போல நடித்தார் பின்னர் மாட்டி கொண்டார் என்பன உள்ளிட்ட செய்திகளை நாம் கேட்டறிந்திருக்கிறோம். திரைப்படங்களில் கூட இது போன்ற காட்சிகள் வந்துள்ளன. ஆனால் இங்கே காப்பீடு தொகை பெறுவதற்காக ஒரு நபர் செய்திருக்கும் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அதுவும் அவர் ஒரு மருத்துவராக இருப்பது தான் நமக்கு மேலும் கலக்கமடைய செய்கிறது.
பிரிட்டனை சேர்ந்த 49 வயதானவர் நீல் ஹாப்பர். இவர் ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர். பிரிட்டனின் ராயல் கான்வெல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக இவர் வேலை செய்து வந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னுடைய உடலில் ரத்தத்தில் தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் உடனடியாக தன்னுடைய இரண்டு முழங்கால்களையும் அகற்றப்படாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கி இருப்பதாகவும் கூறி காப்பீடு தொகைக்கு விண்ணப்பம் செய்திருக்கிறார்.

ஆனால் காப்பீட்டு நிறுவனங்கள் இவர் பொய் கூறி மருத்துவ காப்பீடு கோரினார் என தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றன . இது தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஹாப்பர் 2019 ஆம் ஆண்டு ஜூன் மூன்றாம் தேதி அரிவா குரூப் என்ற மருத்துவ காப்பீடு நிறுவனத்தில் 3 கோடி ரூபாயும் ஜூன் 26 ஆம் தேதி ஓல்ட் மியூச்சுவல் என்ற மருத்துவ காப்பீடு நிறுவனத்திடம் 3 கோடி ரூபாயும் மருத்துவ காப்பீடு தொகை கோரி விண்ணப்பம் செய்திருக்கிறார்.
இந்த இரண்டு நிறுவனங்களிடமும் தன்னுடைய உடலில் ரத்த தொற்று ஏற்பட்டு இருப்பதால் மருத்துவர்கள் உடனடியாக இரண்டு முழங்கால்களையும் அகற்றுமாறு கூறியிருக்கின்றனர் , இந்த அறுவை சிகிச்சைக்கு எனக்கு 3 கோடி ரூபாய் பணம் தேவைப்படுவதாக அவர் கூறினாராம். இந்த நிலையில் அவருடைய உடலில் எந்த ஒரு நோய் தொற்றும் இல்லை என்பதை அறிந்த காப்பீட்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் தற்போது வழக்கு தொடர்ந்து இருக்கின்றன.

அவர் தானாகவே தன்னுடைய இரண்டு கால்களையும் அகற்றி இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கின்றன. இதற்காக நீல் ஹாப்பர் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி ஒரு இணையதளத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு தீங்கு ஏற்படாமல் எப்படி கை கால்களை நீக்குவது, அறுவை சிகிச்சை செய்வது என்பது குறித்த வீடியோக்களை பணம் கொடுத்து வாங்கி இருக்கிறார் .
இதனை இந்த காப்பீட்டு நிறுவனங்கள் கண்டறிந்து அவர் மோசடி செய்ததை கண்டுபிடித்துள்ளன. இவர் மற்றொரு நபரையும் இதே போல காப்பீடு தொகை பெறுவதற்காக இவ்வாறு உடல் பாகங்களை நீக்கிக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இவர் மீதான குற்றச்சாட்டு எழுந்த உடனே 2023ஆம் ஆண்டு பிரிட்டன் மருத்துவ கவுன்சில் இவருக்கான மருத்துவர் அங்கீகாரத்தை ரத்து செய்தது.
ராயல் கார்ன்வெல் மருத்துவமனையும் அவரை வேலையில் இருந்து நீக்கம் செய்து விட்டது. இதனிடையே இவர் மருத்துவராக பணிபுரிந்த சமயத்தில் வேறு யாருக்கேனும் மருத்துவ காப்பீடு தொகை பெற்று தருவதற்காக இப்படி ஏதாவது செய்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாம்.


Click it and Unblock the Notifications