உலகளவில் முன்னணி ஐடி, டெக் நிறுவனங்களிடம் மலை போல் பணம் குவிந்திருந்தாலும், மாறி வரும் தொழில்நுட்பம், ஏஐ மீதான முதலீடு, புதிய வர்த்தகம், மந்தமான டிமாண்ட் ஆகியவற்றை காரணம் காட்டி கடந்த 3 வருடங்களாக டெக் நிறுவனங்கள் தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருகிறது.
இந்த நிலையில் ஐரோப்பிய விமான உற்பத்தியாளரான ஏர்பஸ், அதன் பாதுகாப்பு மற்றும் விண்வெளி பிரிவில் 2,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. செயற்கோள் திட்டங்களில் ஏற்பட்ட இழப்புகள் தான் இந்த முடிவு எடுக்கப்படக் காரணமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

இந்த பிரிவின் மொத்த ஊழியர்களில் சுமார் 7% பேர் அதாவது 2,500 ஊழியர்களை 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் பணிநீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஏர்பஸின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி பிரிவு, செயற்கோள் திட்டங்கள், ஒன்சாட் உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட அதிக செலவுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு திட்டங்களில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் அதிகரித்த செலவுகள் இந்த பிரிவின் நிதி நிலையை கூடுதலாக பாதித்துள்ளன.
ஏர்பஸ் தனது பாதுகாப்பு மற்றும் விண்வெளி வணிகத்திற்குள் ATOM என்ற குறியீட்டு பெயருடன் ஒரு விரிவான செயல்திறன் ஆய்வை நடத்தி வருகிறது. இந்த ஆய்வு மூலம் செலவுகளை குறைக்கவும், ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்கவும் முடியும்.
வேலைவாய்ப்பு குறைப்புகளுக்குக் கூடுதலாக, ஏர்பஸ் தனது விண்வெளி அமைப்புகள் வணிகத்திற்கான ஒரு குறிப்பிட்ட மாற்றத்தைக் கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. இத்தாலியின் லியோனார்டோ மற்றும் பிரான்சின் தாலெஸ் ஆகியவற்றை தனது செயற்கோள் பிரிவுடன் ஒருங்கிணைப்பு நடத்த பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளது.


Click it and Unblock the Notifications