டெல்லி: உலகளவிலான ஈகாமர்ஸ் சந்தையில் குறைந்த காலத்திற்குள் அசுர வளர்ச்சியை அடைந்த அலிபாபா நிறுவனம், சிங்கிள்ஸ் டே (Single's day) சிறப்பு விற்பனையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஓரே நாளில் 11.6 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தைப் பெற்று அதிர்ச்சி அளித்துள்ளது.
இதன் மூலம் உலகச் சந்தையில் ஒரு நாள் விற்பனை சாதனைகள் அனைத்தையும் உடைத்துத் தற்போது புதிய சாதனையைப் படைத்துள்ளது அலிபாபா.
அது என்னபா சிங்கிள்ஸ் டே
1990களில் சீன கல்லூரி மாணவர்கள் காதலர்கள் தினத்தைக் கேளி செய்யும் வகையில் நவம்பர் 11ஆம் நாளை சிங்கிள்ஸ் டே-ஆகக் கொண்டாடி வருகின்றனர்.
இதனைப் பயன்படுத்தி அலிபாபா கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இந்நாளில் சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது.
அலிபாபா குரூப்
அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் உள்ள தனது இணையதளங்களில் வருடாந்திர சிறப்பு விற்பனையை இந்நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் வர்த்தகம் சூடுபிடிக்கத் துவங்கியது. இதனால் மதிய வேளையில் அலிபாபா சுமார் 9 பில்லியன் டாலர் (57 பில்லியன் யுவான்) வர்த்தகத்தைப் பெற்றது.
11.6 பில்லியன் டாலர் வர்த்தகம்
மாலை 6.45 மணியளவில் இந்நிறுவனத்தின் மொத்த விற்பனையின் அளவு சுமார் 74 பில்லியன் யுவானாக உயர்ந்தது, விற்பனையின் முடிவில் இதன் அளவு 87 பில்லியன் யுவானாக உயர்ந்துள்ளது.
இந்தச் சிறப்புத் தள்ளுபடியில் குழந்தைகளுக்கான பொருட்கள், நைக் காலாணிகள், லீவிஸ் ஜீன்ஸ் போன்றவை அதிகளவில் விற்கப்பட்டது என அலிபாபா தெரிவித்துள்ளது.
பிரபலங்கள்
மேலும் இந்த வருடாந்திர விற்பனையைப் பிரபலப்படுத்த அலிபாபா நிறுவன தலைவர் ஜாக் மா அவர்கள் ஹாலிவுட் ஸ்டாஸ் டேனியல் கிரேக் மற்றும் கெவின் ஸ்பேசி ஆகியோரை அழைத்து வந்தார். அதுமட்டும் அல்லாமல் பல புதிய வெளிநாட்டு பிராண்டுகளையும் தனது இணையதளத்தில் இணைத்தார்.
பிஎன்பி பரிபாஸ்
இந்த விற்பனை குறித்துப் பிஎன்பி பரிபாஸ் எஸ்ஏ நிறுவனத்தின் பெய்ஜிங் கிளையின் தலைமை பொருளாதார வல்லுநர் கூறுகையில், சீன வாடிக்கையாளர்களிடம் தற்போதும் அதிகளவில் பணம் புழங்குகிறது. மேலும் ஆன்லைன் விற்பனையில் பல தரப்பட்ட வசதிகள் உள்ளதால் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பொருட்களை வாங்குகின்றனர்.
சில்லறை வர்த்தகம்
சீனா பொருளாதாரம் மந்தமாக உள்ள இந்த நிலையில், சில்லறை வர்த்தகத்தின் வளர்ச்சி அக்டோபர் மாதத்தில் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் 2015ஆம் ஆண்டில் அதிக வளர்ச்சி அடைந்த மாதமும் அக்டோபர் தான்.
அலிபாபா
இந்த வருடாந்திர விற்பனைக்காக அலிபாபா நிறுவனம் 1.7 மில்லியன் டெலிவரி பணியாளர்களைப் பயன்படுத்தியது. இதேபோல் 4000 வாகனங்களைப் பயன்படுத்து ஐபோன் முதல் ஜாக்கி ஜட்டி வரை அனைத்தும் தனது வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் 200 விமானங்களைப் பயன்படுத்தித் துரிதமான முறையில் டெலிவரி செய்துள்ளது.
வாடிக்கையாளர்கள்
விற்பனை நாளில் ஆலிபாபா நிறுவனத்தில் சுமார் 27 மில்லியன் வாடிக்கையாளர்கள் மொபைல் போன் மூலம் தங்கள் ஆர்டர்களைப் பதிவு செய்துள்ளனர்.
சீனா ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர் அதிகரித்துள்ளதற்கு இது முக்கியச் சான்றாகும்.
பிளிப்கார்ட்
1 பில்லியன் டாலர் வர்த்தகத்தை எட்ட முட்டி மோதும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஒரு வருட வர்த்தகத்தை ஓரே நாளில் பெற்றுள்ளது அலிபாபா.


Click it and Unblock the Notifications