அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா, இந்தியா , வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை உயர்த்தி இருக்கிறார். அவருடைய இந்த நடவடிக்கை காரணமாக அமெரிக்காவை சேர்ந்த அமேசான் மற்றும் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெடா உள்ளிட்டவை 10 பில்லியன் டாலர்கள் வரை இழப்பை சந்திக்க கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க நுகர்வோரை இலக்காகக் கொண்டுதான் அமேசான் மற்றும் மெடா நிறுவன தளங்களில் சீன விளம்பரதாரர்கள் பெருமளவு விளம்பரம் செய்கின்றனர். தற்போது அமெரிக்க அரசு தொடங்கியிருக்கும் இந்த வர்த்தக போர் காரணமாக சீன நிறுவனங்கள் அமெரிக்க வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டு செய்து வரும் விளம்பரங்களை குறைக்கலாம் அல்லது நிறுத்தலாம் என சொல்லப்படுகிறது.

இவ்வாறு சீன நிறுவனங்கள் அமெரிக்க வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டு இதுநாள் வரை செய்து வந்த விளம்பரங்களை நிறுத்துவதன் மூலம் அமேசான் மற்றும் மெடா ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய விளம்பர வருவாயில் பெரும்பகுதியை இழக்கும் என பிசினஸ் இன்சைடர் வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் அமெரிக்காவிற்கு வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் குறைந்தபட்சம் 10 சதவீதத்திலிருந்து வரியை விதித்திருக்கிறார். இதில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு அதிகபட்ச வரி விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்சமாக 54 சதவீதம் என இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டன. இதற்கிடையே சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த சூழலில் பிசினஸ் இன்சைடர் வெளியிட்டுள்ள தகவலில் ரீடெய்ல் மீடியா மற்றும் டிஜிட்டல் மீடியா நிறுவனங்கள் இந்த வரி உயர்வு நடவடிக்கையால் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
குறிப்பாக சீனா மற்றும் வியட்நாமில் இருந்து அனுப்பப்படும் பொருட்களுக்கு அந்த நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் மெடா மற்றும் அமேசான் மூலமாகத் தான் பெருமளவில் டிஜிட்டல் முறையில் விளம்பரம் செய்கின்றன. எனவே இந்த இரண்டு நிறுவனங்களும் இதனால் பாதிக்கப்படும் எனக் கூறியுள்ளது. மெடா நிறுவனத்தின் அமெரிக்க வருவாயில் கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலர் சர்வதேச விளம்பரதாரர்களிடம் இருந்துதான் கிடைக்கிறது. இதில் பெரும்பாலான விளம்பரதாரர்கள் சீனாவை சேர்ந்தவர்கள் என பிசினஸ் இன்சைடர் குறிப்பிடுகிறது.
மார்க்கெட் பிளேஸ் பல்ஸ் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வு கட்டுரையில் அமேசானின் அமெரிக்க சந்தை விற்பனையாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் சீன விற்பனையாளர்கள் என குறிப்பிடுகிறது. எனவே சீன நிறுவனங்கள் தங்களுடைய விளம்பரத்தை நிறுத்திக் கொண்டால் அமேசான் நிறுவனத்திற்கு கிடைக்கக்கூடிய விளம்பர வருவாய் பெருமளவில் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications