சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தான் பெரிய பெரிய டெக் நிறுவனங்கள் எல்லாம் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன. இந்த போட்டியில் முதலிடத்திற்கு வர வேண்டும் என ஆப்பிள், கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் , மெடா உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த போட்டியை தீவிரப்படுத்தும் வகையில் ஆப்பிள் நிறுவனம் ஒரு மிகப்பெரிய திட்டத்தை தீட்டியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் சொந்தமாக ஏஐ உருவாக்காமல் ஏற்கனவே ஏஐ பிரிவில் வெற்றி பெற்றிருக்கும் ஒரு நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வரும் Perplexity AI நிறுவனத்தை வாங்குவதற்கு முடிவு செய்து இருக்கிறதாம். இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த நிலை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.

இந்த பேச்சுவார்த்தை தொடக்க நிலையில் தான் இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவராக இருக்கக்கூடிய அட்ரியன் பெரிகா பெர்பிளெக்ஸிட்டி ஏஐ நிறுவனத்தை வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து இருப்பதாக அந்த செய்தி சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இது தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது என பெர்பிளெக்ஸிட்டி ஏஐ தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு வேளை இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஆப்பிள் நிறுவனம் பெர்பிளெக்ஸிட்டி ஏஐ நிறுவனத்தை கையகப்படுத்தினால் இதுவரை இல்லாத அளவு ஆப்பிள் நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்கக்கூடிய ஒரு நிறுவனமாக பெர்பிளெக்ஸிட்டி ஏஐ இருக்கும். 2014 ஆம் ஆண்டு ஆப்பில் நிறுவனம் இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சம் 3 பில்லியன் டாலர்கள் கொடுத்து பீட் நிறுவனத்தை வாங்கியது.
பெர்பிளெக்ஸிட்டி ஏஐ நிறுவனத்தின் மதிப்பு 14 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் இந்த நிறுவனத்தை வாங்கி தங்களுடைய தேடுபொறியோடு இணைப்பதற்கு முடிவு செய்து இருக்கிறதாம்.2022 ஆம் ஆண்டு சீனிவாஸ் டென்னிஸ் யாரட்ஸ், ஜானி ஹோ, கான்வின்ஸ்கி ஆகியோரால் தொடங்கப்பட்ட நிறுவனம் தான் பெர்பிளெக்ஸிட்டி ஏஐ. இது முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடிய ஒரு தேடு பொறியாகும். இந்த செயலி வாயிலாக நாம் நம்முடைய கேள்விகளை உள்ளீடு செய்தால் இந்த ஏஐ கருவி தனக்கு இருக்கும் அனைத்து மூலங்களில் இருந்தும் தகவல்களை சேகரித்து நமக்கு பதிலாக வழங்கும்.
பாரம்பரியமாக நாம் பயன்படுத்தும் தேடு பொறிகளை போல் இல்லாமல் பெர்பிளெக்ஸிட்டி ஏஐ ஒரு கலந்துரையாடல் அடிப்படையிலான அனுபவத்தை பயனாளர்களுக்கு வழங்குகிறது . மக்கள் தற்போது கூகுள் உள்ளிட்ட தேடு பொறிகளுக்கு மாற்றாக ஏஐ அடிப்படையான கருவிகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளதே ஆப்பிளின் இந்த முடிவுக்கு காரணம்.


Click it and Unblock the Notifications