சர்வதேச அளவில் டெக் நிறுவனங்கள் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 23,468 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி உள்ளன. டெக் நிறுவனங்கள், வாகன உற்பத்தி நிறுவனங்கள் என பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களும் கடந்த சில ஆண்டுகளாகவே ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
அந்த வகையில் 2025ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து கடந்த நான்கு மாதத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர். மார்ச் மாதத்தில் 21 நிறுவனங்கள் 8,834 பேரை வேலையிலிருந்து நீக்கிய நிலையில் ஏப்ரல் மாதத்தில் அந்த எண்ணிக்கை 23,468 ஆக உயர்ந்திருக்கிறது.

2025 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நான்கு மாத காலத்தில் ஏப்ரல் மாதத்தில் தான் அதிகமான ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இன்டெல் நிறுவனத்தை சேர்ந்தவர்கள். இன்டெல் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் சுமார் 20% பேரை வேலையில் இருந்து நீக்கி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது.
அதே போல மெட்டா நிறுவனமும் தங்கள் ஊழியர்களில் சுமார் 100 பேரை வேலையில் இருந்து நீக்கி இருக்கிறது. குறிப்பாக மெட்டா நிறுவனத்தின் விர்ச்சுவல் ரியாலிட்டி பிரிவில் பணியாற்றி வந்த ஊழியர்கள் தான் இந்த பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கூகுள் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பிளாட்பார்ம் மற்றும் டிவைசஸ் பிரிவுகளில் பணியாற்றி வந்த ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி இருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு , பிக்சல் போன்கள் மற்றும் குரோம் பிரவுசர்கள் பிரிவில் வேலை செய்து வந்த ஊழியர்கள் தான் இந்த பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உலகளவில் மட்டுமல்ல இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களும் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை எடுத்துள்ளன. இந்தியாவில் கார்ஸ்24 நிறுவனம் மற்றும் Gupshup ஆகிய நிறுவனங்களில் ஏப்ரலில் ஊழியர் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டன.
Gupshup, என்பது ஏஐ தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 200 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. அதே போல பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி விற்பனை செய்யும் கார்ஸ்24 நிறுவனமும் 250 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக தெரிவித்தது.
Layoffs.Fyi என்ற தளம் சர்வதேச அளவில் ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பான தகவல்களை கண்காணித்து வருகிறது. இந்த நிறுவனம் 2025ஆம் ஆண்டு தொடங்கியது முதல் தற்போது வரை 112 நிறுவனங்கள் 51,028 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications