அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து வெளிநாட்டவர்கள் அமெரிக்க குடிமகன்களாக மாறுவதற்கான நடைமுறைகளை பெருமளவில் கடுமையாக்கி இருக்கிறார். அத்தனை எளிதாக தற்போது வெளிநாட்டவர்களுக்கு அமெரிக்காவுக்கு செல்ல விசா கூட கிடைப்பது கிடையாது .
அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் முழுவதுமாக அமெரிக்க குடிமகனாகி அரசின் அனைத்து சலுகைகளையும் பெற வேண்டும் என்றால் அதற்கு தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். இதனை Naturalization என அழைக்கிறார்கள். அமெரிக்க குடியுரிமை துறையிடம் இதற்காக விண்ணப்பம் செய்து Naturalization Civics Test எனப்படும் தேர்வினை எழுத வேண்டும்.

இந்த விண்ணப்பம் மற்றும் தேர்வு முறையை டிரம்ப் அரசு தற்போது கடுமையாக்கி இருக்கிறது. இதற்கு முன்பு 2020 ஆம் ஆண்டு டிரம்ப் அரசு தான் Civics Test என்பதை கொண்டு வந்தது. பின்னர் பைடன் நிர்வாகம் இதனை நீக்கியது. தற்போது மீண்டும் டிரம்ப் அரசு இதனை நடைமுறைப்படுத்துகிறது. அக்டோபர் மாதம் முதல் இந்த விண்ணப்பம் செய்பவர்கள் கடுமையான தேர்வினை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
எனவே அமெரிக்க குடியுரிமை வேண்டும் என கூறும் விண்ணப்பதாரர்கள் கடுமையான தேர்வுகளை இனி எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இதன்படி அமெரிக்க குடியுரிமை கோரி விண்ணப்பம் செய்யக் கூடிய நபர் அமெரிக்க வரலாறு, அமெரிக்க அரசாங்கம் உள்ளிட்டவை தொடர்பான 128 கேள்வி பதில்களை கட்டாயம் படித்தாக வேண்டும். இதனை அடுத்து அவர்களுக்கு ஓரல் எக்ஸாம் நடக்கும். அதாவது அதிகாரிகள் கேள்வி கேட்பார்கள் அதற்கு பதில் கூற வேண்டும்.

மொத்தம் 20 கேள்விகள் கேட்கப்படும் இந்த 20 கேள்விகளில் 12 கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்தால் தான் குடியுரிமை விண்ணப்பம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும். இதற்கு முன்பு விண்ணப்பதாரர்களுக்கு 100 கேள்விக்கு பதில்கள் வழங்கப்பட்டு அதில் 10 கேள்விகள் கேட்கப்பட்டு 6 கேள்விகளுக்கு பதில் அளித்தாலே போதும் என்ற நிலை இருந்தது. அதனை தற்போது மாற்றி இருக்கின்றனர்.
முதல் முறை தவறும் நபர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இரண்டாவது வாய்ப்பிலும் அவர்கள் தோல்வி அடைந்தால் அவர்களின் விண்ணப்பம் முழுவதுமாக நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் குறைந்தது அமெரிக்காவில் 20 ஆண்டுகள் வாழ்ந்திருப்பவர்கள் 20 கேள்விகளைப் படித்து அவர்களுக்கு தெரிந்த மொழியில் பதிலளித்தாலே போதும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது .
இது மட்டுமில்லாமல் குடியுரிமை கேட்டு விண்ணப்பம் செய்பவர்களின் அண்டை வீட்டார்கள் மற்றும் அவர்கள் வேலை செய்யும் இடங்களில் சக பணியாளர்களிடம் எல்லாம் குடியுரிமை துறை அதிகாரிகள் சென்று அந்த நபரின் குணாதிசயங்கள் குறித்து எல்லாம் இனி விசாரணை நடத்துவார்களாம். இவற்றை எல்லாம் அடிப்படையாக கொண்டு தான் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications