பெய்ஜிங், சீனா: உலக அளவில் மின்சார கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னிலையில் இருக்கக்கூடிய சீன நிறுவனமான பிஒய்டி(BYD) ஐந்து நிமிடங்களில் மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளை சார்ஜ் செய்யும் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய பேட்டரி மற்றும் சார்ஜிங் சிஸ்டத்தை பிஒய்டி நிறுவனம் சூப்பர் இ பிளாட்பார்ம் (SUPER E PLATFORM) என அழைக்கிறது. 1000 கிலோ வாட் சார்ஜிங் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு அமைப்பு ஐந்து நிமிடங்களில் காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிடுமாம். இவ்வாறு சார்ஜ் செய்யப்பட்ட காரை நாம் 470 கிலோ மீட்டர் வரை இயக்க முடியும் என பிஒய்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிஒய்டி நிறுவனத்தின் இந்த புதிய சார்ஜிங் அமைப்பு அறிமுகம் செய்யப்பட்ட உடனே அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. சர்வதேச அளவில் டெஸ்லாவுக்கு போட்டியாக இருக்கிறது சீனாவின் பிஒய்டி நிறுவனம். மின்சார கார்கள் சந்தையில் அடுத்தடுத்து புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்த வண்ணம் இருக்கிறது. தற்போது மின்சார வாகனங்கள் பயன்படுத்துவோருக்கு இருக்க கூடிய பிரச்சனை அந்த பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். இதுவே பெட்ரோல் கார் என்றால் பெட்ரோல் நிலையத்திற்கு சென்று ஐந்து நிமிடங்களில் வேலையை முடித்துக் கொண்டு நம் வாகனத்தை இயக்கலாம்.
மின்சார வாகனங்களை பயன்படுத்துவோருக்கு இருக்கும் முக்கியமான பிரச்சனைக்கு தங்களுடைய நிறுவனம் தீர்வு கண்டிருப்பதாக பிஒய்டி நிறுவனர் வாங் கூறியுள்ளார். எப்படி நாம் 5 நிமிடங்களில் பெட்ரோலை நிரப்புகிறோமோ அதே போல மின்சார வாகன வாகனங்களின் பேட்டரியை ஐந்து நிமிடங்களில் சார்ஜ் செய்யும் வசதி வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்த தொழில்நுட்பத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியானது அடுத்து நிறுவனத்தின் பங்கு மதிப்பு 6 சதவீதம் வரை உயர்ந்தது. பிஒய்டிக்கு போட்டி நிறுவனமாக இருக்கக்கூடிய டெஸ்லா தற்போதைக்கு 500 கிலோ வாட் சார்ஜிங் ஸ்பீடு என்ற அடிப்படையில் தான் சூப்பர் சார்ஜர்களை வைத்திருக்கிறது. அதைவிட அதிகமாக 1000 கிலோவாட் என்ற சூப்பர் சார்ஜரை பிஒய்டி அறிமுகம் செய்துள்ளது.
இது தவிர சீனா முழுவதும் நான்காயிரம் இடங்களில் அதிவேக பேட்டரி சார்ஜிங் நிலையங்களை நிறுவப்போவதாக பிஒய்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே சர்வதேச அளவில் பிஒய்டி நிறுவனத்தின் கார்கள் விற்பனை முன்பை விட பல மடங்கு அதிகரித்திருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் இந்த நிறுவனம் 3,18,000 மின்சார கார்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத்தின் விற்பனை 161% என வளர்ச்சி அடைந்துள்ளது. அதே வேளையில் சீன சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் விற்பனை 49 சதவீதம் சரிவை கண்டுள்ளது.


Click it and Unblock the Notifications