கனடா: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி இருக்கும் வர்த்தகப் போரால் கனடாவில் பொருளாதார மந்த நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
கனடா நாட்டை சேர்ந்த 88 சதவீத தொழிலதிபர்கள் நாட்டின் பணவீக்கம் அதிகரித்து வருவதாகவும் பொருளாதாரம் சரிவை நோக்கி சென்று வருவதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபராக பதவி ஏற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளிடமிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அதிகப்படுத்தி இருக்கிறார். இதனால் கனடா ,மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன.

டிரம்பின் இந்த நடவடிக்கை ஏற்கனவே பொருளாதார சிக்கலில் இருக்கும் கனடாவில் மேலும் பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கிறது. கனடா நாட்டில் ஏற்கனவே வேலைவாய்ப்பின்மை அதிகரித்து, அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. தொழில்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த சூழலில் டிரம்ப் நிர்வாகம் எடுத்து வரக்கூடிய வரி நடவடிக்கைகள் அந்நாட்டில் பொருளாதார மந்த நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
கனடாவை சேர்ந்த 67 சதவீத தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் தங்கள் நிறுவனங்களின் செலவினங்களை பெருமளவில் குறைத்து விட்டதாகவும் எந்த முதலீடுகளையும் மேற்கொள்ளாமல் பணத்தை ரொக்கமாக கையில் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்கள் பணிநீக்கம் , புதிதாக வேலைக்கு ஆட்களை சேர்க்காமல் இருப்பது என்பன போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளன. சில நிறுவனங்கள் திவாலானதாகவே அறிவித்துவிட்டன.
இந்நிலையில் கனடா நாட்டு தொழில் அதிபர்கள் அமெரிக்காவை சார்ந்திருக்கும் போக்கை மாற்றி விட்டு தங்களுடைய வர்த்தகத்தை ஐரோப்பிய நாடுகளை நோக்கி திருப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் கனடா நாடு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளோடு வர்த்தகத்தை வலுப்படுத்த தொடங்கினால் கனடா நாட்டுப் பொருட்களுக்கான வரியை இன்னும் அதிகரிப்போம் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அப்படியே இருந்தாலும் கனடா நாட்டில் தொழில் மேற்கொண்டு இருக்கும் பல்வேறு நிறுவனங்களும் அமெரிக்கா தவிர்த்து வேறு நாடுகளை நாட தொடங்கி இருக்கின்றன. டிரம்பின் பதவிக்காலம் இன்னும் நான்காண்டுகள் இருக்கிறது என்பதால் அமெரிக்காவுடனான வர்த்தகத்தை பெருமளவில் குறைத்து விட்டு மற்ற நாடுகளை நோக்கி வர்த்தகத்தை பரவலாக்க வேண்டும் என பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவர்களும் கனடா நாட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
டெலிகாம் மற்றும் விமான போக்குவரத்து துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் கொள்கைகளை மாற்றம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்ட சில வரிகளை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனிடையே பொருளாதார மந்த நிலை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக கனடா நாட்டு மக்கள் கூறுகின்றனர். வீடுகளின் விற்பனை சரிந்து விட்டதாகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிட்டதாகவும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications