டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட வரி விதிப்பை, மார்ச் 4ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, கனடா அரசு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கப் பொருட்கள் மீது வரிகளை விதிக்கும் விரிவான திட்டத்தை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் அண்டை நாடான கனடா உடன் மிகவும் நெருங்கிய நட்புறவை வைத்திருந்தாலும், டிரம்ப் அரசு ஆட்சிக்கு வந்த முதல் நாளே கனடா மீது வரியை விதிக்க முடிவு செய்து நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டது. இரு நாடுகள் மத்தியிலான பேச்சு வார்த்தையின் விளைவாக இந்த வரி விதிப்பு 30 நாள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அமெரிக்க நேரப்படி மார்ச் 4 ஆம் தேதி முதல் இந்த வரியை விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத கனடா அரசு அமெரிக்க அரசைத் திருப்பி அடிக்கும் வகையில் 2 கட்டத்தில் அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியை விதிக்க முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா-வின் முடிவுகள் வர்த்தக சந்தையை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் கனடாவின் பதிலடி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக போரை உருவாக்கியுள்ளது. இதேவேளையில் மெக்சிகோ நாடும் அடுத்த 24 மணிநேரத்தில் எப்போது வேண்டுமானாலும் வரிகளை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசுகையில், கனடா அரசு, அமெரிக்காவின் நியாயமற்ற குற்றச்சாட்டுகளையும், செயலைகளையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டும், ஏற்றுக்கொண்டும் இருக்காது என்று கூறினார். அமெரிக்க அரசு எப்படி கனடா பொருட்கள் மீது வரியை விதிக்கிறதோ, அதேபோல் கனடாவும் தனது பதிலடி வரியைக் கட்டம் கட்டமாகச் செயல்முறைப்படுத்தும்.
இந்த முடிவின் முதல் கட்டத்தில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 30 பில்லியன் கனேடிய டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும். இது நியூயார்க் நேரப்படி செவ்வாய்க்கிழமை தொடக்கத்தில் இந்த வரி அமலுக்கு வரும். இதேபோல் அமெரிக்க அரசாங்கம் அதன் வரி கொள்கையைத் திரும்பப் பெறாவிட்டால் இந்த வரி கட்டாயம் செயல்முறைப்படுத்தப்படும், அமெரிக்கா திரும்பப் பெற்றால், நாங்களும் திரும்பப் பெறுவோம் எனத் தெரிவித்துள்ளது கனடா அரசு.
இதை தொடர்ந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு அடுத்த கட்ட வரி விதிப்பு செயல்படுத்தப்பட உள்ளது. இதில் 125 பில்லியன் கனேடிய டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்குக் கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும். இந்த இரண்டாவது கட்டத்தில், ஆட்டோமொபைல்கள், வணிக டிரக்குகள், எஃகு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட முக்கியமான பொருட்களுக்கு வரி விதிக்கப்படும்.
பிரதமர் ட்ரூடோ இந்த பதிலடி வரி அனைத்தும், அமெரிக்க அரசாங்கம் அதன் வர்த்தக நடவடிக்கைகளை ரத்து செய்யும் வரை அமலில் இருக்கும் என்று கூறினார். அமெரிக்க அரசு தனது வரி விதிப்பை மேலும் அதிகரித்தால், கனடா அரசு மாகாணங்கள் மற்றும் நகரங்கள் அடிப்படையில் அமெரிக்க வர்த்தகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம், இதற்கான பேச்சுவார்த்தையை ஏற்கனவே துவங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.
கனடா, அமெரிக்கா மத்தியிலான வர்த்தக மோதல், வருடத்தில் சுமார் 900 பில்லியன் டாலர்களுக்கு மேல் வர்த்தகம் பாதித்துள்ளது. குறிப்பாக, கனடா அமெரிக்கப் பொருட்களை அதிகம் வாங்கும் ஒரு நாடாக உள்ளது, இதேபோல் அமெரிக்காவும் கனடாவில் இருந்து தான் அதிகப்படியான பொருட்களை வாங்குகிறது.


Click it and Unblock the Notifications