சென்னை: சீனாவின் வர்த்தக துறை அமைச்சகம் திங்களன்று அமெரிக்காவைச் சேர்ந்த சில நிறுவனங்களுக்குச் சீனாவுடனான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடை செய்துள்ளது.
இந்தத் தடைப்பட்ட நிறுவனங்களில், தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்த நிறுவனமும் ஒன்று உள்ளது. மேலும், இந்த நிறுவனங்கள் சீனாவில் புதிய முதலீட்டைச் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீன அரசின் செய்தி நிறுவனமான Xinhua வெளியிட்ட செய்தியின் படி, ஜெனரல் அடோமிக்ஸ் ஏரோநாட்டிக்கல் சிஸ்டம்ஸ் (General Atomics Aeronautical Systems), ஜெனரல் டைனமிக்ஸ் லேண்ட் சிஸ்டம்ஸ் (General Dynamics Land Systems) ஆகிய நிறுவனங்கள் நம்பகமற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
அதேபோல், போயிங் டிஃபென்ஸ், ஸ்பேஸ் அண்ட் செக்யூரிட்டி (Boeing Defense, Space and Security) நிறுவனமும் இந்த தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக சீன அரசின் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேபோல் இந்த மூன்று நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகளுக்கும் சீனாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களது வொர்க் பர்மிட் ரத்து செய்யப்பட்டு, சீனாவில் வசிக்கும் உரிமை மற்றும் சுற்றுலா பயண விசா ஆகியவையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இவர்கள் சமர்ப்பிக்கும் எந்த முதலீட்டு விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று வர்த்தக துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன?: அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக போர் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன்பாக சீனா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னோட்டமாக அமெரிக்க அரசு சீனாவின் டிக்டாக் மீது தடை, சீனாவின் செமிகண்டக்டர் சிப் துறை வளர்ச்சியை முடக்கும் நடவடிக்கைகள் என பல நெருக்கடியை அமெரிக்கா சீனாவுக்கு கொடுத்து வருகிறது. இந்த வேளையில் கடந்த வாரம் அமெரிக்க அரசு, சீன நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் 14 பொருட்களுக்கு வரியை அதிகரித்துள்ளது. இதனால் சீனா அதிரடியாக முடிவுகளை எடுக்க துவங்கியுள்ளது.
மறுபுறம் தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ததற்காகவே இந்த அமெரிக்க நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகச் சீன வர்த்தக துறை தெரிவித்துள்ளது. சீனா, தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. ஆனால், தைவான் தன்னை ஒரு சுதந்திரமான நாடாக அடையாளப்படுத்திக் கொள்கிறது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா, தைவானுக்கு ஆதரவளிக்கிறது, இதைச் சீனா கடுமையாக எதிர்க்கிறது. இதன் காரணமாகவே இந்த வர்த்தக தடை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகச் சீன வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பின்பு சீன அமைதியாக இருந்த நிலையில், சீனா திருப்பி அடிக்காது என பலரும் கணித்த நிலையில், களத்தில் இறங்கி அமெரிக்காவைத் திருப்பி அடிக்க துவங்கியுள்ளது. இதனால் இனி இரு நாடுகளுக்கும் பெரிய வர்த்தக போர் நடப்பதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications