2019ஆம் ஆண்டில் உலக நாடுகளைப் பொருளாதார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் பாதித்த ஒரு விஷயம் அமெரிக்கா சீனா இடையில் நடந்த வர்த்தகப் போர் தான். அமெரிக்கா தொடர்ந்து சீனா மீது வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் அதீத வரி விதிப்புகளை விதித்துச் சீனாவை மிரட்டியது. மிரட்டலுக்குப் பயப்படாத சீனா அமெரிக்கா மீதும் தொடர்ந்து வரி விதிப்பு, வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்தது.
இருநாடுகளும் தொடர்ந்து நெருக்கடியை உருவாக்கி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இதன் பின்விளைவுகளை உணர்ந்து சமாதான பேச்சுவார்த்தைக்குத் தயாராகியது. இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் மிகப்பெரிய வர்த்தகம் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த முக்கியமான ஒப்பந்தம் வருகிற ஜனவரி 15ஆம் தேதி இரு நாடுகள் மத்தியிலும் கையெழுத்தாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
2 வருடத்தில் 200 பில்லியன் டாலர்
இரு நாடுகள் மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் பல பகுதிகளாகச் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி ஜனவரி 15ஆம் தேதி செய்யப்படும் ஒப்பந்தத்தில் சீனா, அமெரிக்காவிடம் இருந்து கூடுதலாக அடுத்த 2 வருடத்திற்கு 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வாங்க வேண்டும் என்பது மிக முக்கியமான உடன்பாடாக உள்ளது. இதிலும் முக்கியமாக விவசாயத் துறையில் 40 முதல் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வாங்க வேண்டும் எனக் குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.
வல்லரசு நாடுகள்
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக உருவெடுக்கச் சீனா அமெரிக்காவுடன் போட்டிப் போட்டு வரும் நிலையில், அமெரிக்கா அந்தக் கனவைத் தகர்க்கும் வகையில் அடுத்தடுத்த வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்தது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத சீனா மிகப்பெரிய சிக்கலில் சிக்கி தற்போது பலகட்ட பேச்சுவார்த்தையில் இச்சிக்கலில் வெளிவந்ததுள்ளது. இது சீனாவின் வர்த்தகத் தடையை நீக்கினாலும், இதனால் அமெரிக்காவுக்குத் தான் மிகப்பெரிய லாபம்.
ஜனவரி 15
அமெரிக்கா, சீனா இடையே நடக்கும் முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் வருகிற ஜனவரி 15ஆம் தேதி கையெழுத்தாகப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். இதற்காகச் சீனாவில் இருந்து துணை அதிபர் லேயூ அமெரிக்காவில் 3 நாள் தங்குகிறார்.
முதல் கட்ட ஒப்பந்தம்
இந்த முதல் கட்ட ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் தொழில்நுட்பம், விவசாயத் துறை, நிதியியல் துறை, பொருட்கள் கொள்முதல் மற்றும் இதர நிர்வாகப் பிரச்சனைகளை மையப்படுத்தி ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய நன்மை அளிக்கும். அதேபோல் 2ஆம் கட்ட ஒப்பந்தத்தில் இதர பல முக்கியமான விஷயங்கள் அடங்கியுள்ளது என அமெரிக்க அரசு தரப்பு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications