குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வாகி இருப்பது சீனாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு சுமூகமாக இல்லை.
இந்த நிலையில் சீனா மீது கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்கா அதிபராக பதவியேற்க இருக்கிறார் . எனவே அடுத்த நான்காண்டு காலம் சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலு விழக்கும் என சொல்லப்படுகிறது.

ஏற்கனவே டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது சீன பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரிகளை விதித்தார். மேலும் பல்வேறு சீன நிறுவனங்களுக்கு தடை விதித்தார்.
சீன நிறுவனங்களின் கருவிகள் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கூறி வந்தார் டிரம்ப். அதுமட்டுமின்றி சர்வதேச அளவில் சீனாவை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார். இதன் காரணமாக சீனா அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவு பெரும் பாதிப்பை சந்தித்தது. பின்னர் பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்று இரு நாட்டு உறவை சற்றே சீர்ப்படுத்தினார்.
தற்போது ட்ரம்ப் மீண்டும் வெற்றி பெற்று இருப்பது சீனாவுக்கு கவலையை ஏற்படுத்தி இருப்பதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு மீண்டும் சீனாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபடலாம் என்ற கவலை சீனாவுக்கு எழுந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
தற்போது தான் சீனா பொருளாதார மந்த நிலையிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. சீனா ஒரு ஆண்டில் 400 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களை அமெரிக்காவிற்கு அனுப்பி விற்பனை செய்கிறது. இதில் அமெரிக்கர்கள் மறைமுகமாக வேறு நாடுகளிலிருந்து வாங்கும் சீன பொருட்களின் மதிப்பு பல நூறு பில்லியன் டாலர்கள் ஆகும்.
அந்த வகையில் சீன பொருட்கள் மற்றும் சீனாவுடன் வர்த்தகத்தின் மீது எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அது அந்நாட்டின் வர்த்தகத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும். தைவானுக்கு சீனா நெருக்கடி கொடுத்து வந்த வேலையில் எல்லாம் ஜோ பைடன் தலைமையிலான அரசு தைவானுக்கு உதவிக்கரம் நீட்டியது.
ஆனால் டிரம்பை பொருத்தவரை ஏற்கனவே தைவானுக்கு தாங்கள் அளிக்கும் பாதுகாப்புக்கு அவர்கள் தங்களுக்கு பணம் வழங்க வேண்டும் என பேசியவர். எனவே தைவானை பொறுத்தவரை இதுவரை அவர்களுக்கு அமெரிக்காவிடமிருந்து கிடைத்த பாதுகாப்பு இனி கிடைக்காது.
அந்த வகையில் சீனாவுக்கு இது ஒரு நிம்மதியை கொடுக்கும். ஆனால் வர்த்தக உறவு என பார்க்கும்போது ட்ரம் நிர்வாகம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications