சீனாவில் ரியல் எஸ்டேட் பிஸினஸ் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கட்டி முடிக்கப்பட்ட 6 கோடி அப்பார்டெமென்ட்கள் விலைபோகாமல் பாழாகி வருகின்றன. இதனால் சீனாவின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமாக வீடு கட்டியுள்ளதால் தான் இந்த நிலைமை என்றும் இதனால் வீட்டின் விலையும் கடுமையாக சரிந்துள்ளதாகவும் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் கூறினர்.
விற்காத வீடுகளை வாங்குவதற்காக மாகாண அரசுகளுக்கு சீன அரசு 41 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாகத் தந்துள்ளது. வீடுகளுக்கு குறைந்த டவுண்பேமென்டை வாங்குமாறும் வட்டி விகிதத்தை குறைக்குமாறும் அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்த சலுகைகளெல்லாம் பயன்தருமா என்பது அடுத்த சில ஆண்டுகளில்தான் தெரிய வரும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். சீனாவின் டயர் 1 நகரங்களில்கூட ரியல் எஸ்டேட் சந்தை மீள்வதாக இருந்தாலும் வீடுகளை விற்பதற்கு கிட்டத்தட்ட 27 மாதங்கள் ஆகியுள்ளன.
சீனாவின் மிகப் பெரிய நகரங்களான ஷாங்காய், ஷென்ஜென், குவாஜுவாவில் டவுண்பேமென்ட்களை மிகவும் குறைத்துள்ளதோடு மிக மலிவான வீட்டுக் கடன்கள் வழங்கப்படுகின்றன. இருப்பினும் வீடுகளை வாங்குவதற்கு மக்கள் பெரிய ஆர்வத்தைக் காண்பிக்கவில்லை.
வீடு வாங்குவோரின் மனநிலையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக புரோக்கர்கள் தெரிவிக்கின்றனர். நாடுமுழுவதும் 391 மில்லியன் சதுர மீட்டர் பரப்பில் கோடிக்கணக்கில் வீடுகள் கட்டப்பட்டு விற்காமல் உள்ளன.
அரசு உதவி பெறும் நிறுவனங்கள் இந்த வீடுகளை வாங்குவதற்கு சீன மத்திய அரசு 500 பில்லியன் யுவான்களை கடனாகத் தந்துள்ளது. இதன்மூலம் புரோமோட்டர்களிடமிருந்து இந்த நிறுவனங்கள் வீடுகளை வாங்குவதற்கு ஊக்குவித்துள்ளது.
இதனிடையே சீனா வாங்கே கோ, லாங்ஃபார் குரூப் ஹோல்டிங்ஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் தங்களது கடனை சமாளிக்க முடியாமல் தாங்கள் கட்டிய வீடுகளை அரசு உதவி பெறும் நிறுவனங்களிடம் குறைந்த விலையில் வீடுகளை விற்று கடனை சமாளிக்கத் தொடங்கி விட்டன.
சீன அரசின் நிவாரண கடன் உதவிகள் எடுபடாமல் போயுள்ளதால் அதன் பொருளாதார சூழ்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பல புரோமோட்டர்கள் தங்கள் வீடுகளை வங்கிகளில் அடமானம் வைத்து கடன்களைப் பெறுகின்றனர். அவர்களது வீடுகளை விற்கமுடியாமல் மிகவும் திண்டாடி வருகின்றனர்.
வீடுகளை விற்கும் உள்ளூர் அரசுகள், டெவலப்பர்கள், வங்கிகளுக்கு மானியத்தையும் சீன அரசு அளிக்கின்றது.கடந்த 18 மாதங்களில் சீன நகரங்களில் கட்டி முடிக்கப்பட்டு விற்பனைக்காக காத்திருக்கும் வீடுகளின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டதாக அந்நாட்டு ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதனால் புதிய குடியிருப்புத் திட்டங்களை டெவலப்பர்கள் முற்றிலும் ஏறக் கட்டி விட்டனர்.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications