இந்திய பொருளாதார மந்த நிலையை யார் மறைத்தாலும் சரி, மறுத்தாலும் சரி, புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட 4.5 சதவிகித ஜிடிபி வளர்ச்சியை மறைக்க முடியவில்லை. மறுக்கவும் முடியவில்லை.
ஏற்றுமதி சரிவு, வியாபார சரிவு, வங்கிகளில் நிதி நெருக்கடி, என் பி எஃப் சி நிறுவனங்கள் திவால் ஆவது, ஜி எஸ் டி வரி செலுத்திய வியாபாரிகளுக்கு தகுந்த நேரத்தில் வரி ரீஃபண்ட் கொடுக்காதது, தேவை & நுகர்வு குறைவு, வேலை இல்லா திண்டாட்டம் என பல பிரச்னைகள் இந்தியாவில் அழுத்தமாக கால் ஊன்றி இருக்கின்றன.

எனவே ஜிடிபி இப்படி சரிவை சந்தித்ததில் பெரிய ஆச்சர்யம் இல்லை. இந்தியாவின் 2019 - 20 நிதி ஆண்டில் ஜூலை - செப்டம்பர் 2019 காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி வெறும் 4.5 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டு இருக்கிறது. இது இந்தியப் பொருளாதாரத்தில், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரிய சரிவு எனச் சொல்லி புலம்பிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் நம்மை விட ஒரு நாடு, பொருளாதார வளர்ச்சியில் மரண அடி வாங்கி இருக்கிறது என்றால் நம்புவீர்களா..?
நம்பவில்லை என்றால், முதலில் நம்புங்கள்.. சரி எந்த நாடு என்று தெரியுமா..? சீனா.
என்னது சீனாவின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்து இருக்கிறதா..? ச்ச.. ச்ச.. நம்பும் படியாக இல்லையே எனக் கேட்கிறீர்களா..?
சீனாவில் 2010 - 11 காலங்களில் எல்லாம் ஆண்டு ஜிடிபி வளர்ச்சியே சுமாராக 9.5 சதவிகிதம் வரை வளர்ச்சி கண்டு கொண்டு இருந்தது தான். ஆனால் அடுத்தடுத்து வந்த பொருளாதார மந்த நிலை, அமெரிக்க சீன வர்த்தகப் போர் போன்ற காரணங்களால், சீன பொருளாதாரமும் இந்திய பொருளாதாரத்தைப் போல நொண்டி அடிக்கத் தொடங்கிவிட்டது.
எனவே கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த ஜூலை - செப்டம்பர் 2019 காலாண்டில் வெறும் 6 சதவிகிதம் ஜிடிபி வளர்ச்சி கண்டு இருக்கிறது. கடந்த செப்டம்பர் 2017 காலாண்டில் இருந்தே சீன பொருளாதாரம் 6.8 சதவிகிதத்தில் இருந்து படிப்படியாக இறக்கம் கண்டு கொண்டே வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது செப்டம்பர் 2019-ல் வெறும் 6 சதவிகிதம் ஜிடிபி வளர்ச்சி கண்டு, 27 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த வளர்ச்சியைப் பதிவு செய்து இருக்கிறது சீனா.


Click it and Unblock the Notifications