மாலத்தீவுடன் வலுவான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக இலவச ராணுவ உதவிகளை வழங்குவதற்காக மாலத்தீவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சீனா திங்களன்று கையெழுத்திட்டது.
மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு தனது தீவு நாட்டிலிருந்து இந்திய ராணுவ வீரர்களின் முதல் குழுவை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை நிர்ணயித்த சில வாரங்களுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மொஹமட் கசான் மௌமூன் மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் வாக்குவன் ஆகியோர் மாலத்தீவு குடியரசுக்கு சீனாவின் ராணுவ உதவியை இலவசமாக வழங்குவது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் வலுவான இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கானது என்று மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது. எனினும், பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்த விவரங்கள் பற்றி தெரியவில்லை.
இதுபற்றி சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில் சீனாவின் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகள் அமைதியான நோக்கங்களுக்காகவும், கடல் பற்றிய மனிதகுலத்தின் அறிவியல் புரிதலுக்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டவை என்று கூறினார்.
சீன சார்புத் தலைவராக பரவலாகக் கருதப்படும் அதிபர் முய்ஸு, தனது நாட்டிலிருந்து இந்திய ராணுவ வீரர்களின் முதல் குழுவை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு மார்ச் 10 என நிர்ணயித்துள்ளார்.
இந்த நிலையில் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டரை இயக்குவதற்கான தொழில்நுட்ப பணியாளர்களின் முதல் குழு மாலத்தீவு சென்றடைந்துள்ளது. இந்த தளத்தை இயக்கும் தற்போதைய பணியாளர்களை இது மாற்றும் என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் புதுதில்லியில் பிப்ரவரி 29 அன்று தனது ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
இந்திய ராணுவ வீரர்களை வாபஸ் பெறுவது தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் கூட்டத்துக்குப் பிறகு, மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம், மே 10-ஆம் தேதிக்குள் இந்தியா தனது அனைத்து ராணுவ வீரர்களையும் இரண்டு கட்டங்களாக மாற்றும் என்று கூறியது. கடந்த ஆண்டு நவம்பரில் முய்ஸு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சில அழுத்தங்களுக்கு உள்ளாகின.
முய்ஸு அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்திய ராணுவ வீரர்களை தனது நாட்டிலிருந்து வெளியேற்றும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று கூறினார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இந்தியாவுக்கு ஆதரவான தற்போதைய அதிபர் இப்ராஹிம் முகமது சோலியை முய்சு தோற்கடித்தார். முந்தைய அரசுகள் இந்தியாவுடன் கையெழுத்திட்ட 100க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களை மீளாய்வு செய்வதாக தற்போதைய முய்ஸு அரசு தெரிவித்துள்ளது.
Story Written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications