அமெரிக்கா உடனான வர்த்தகப் பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில், தன் நாட்டையும், நாட்டு வர்த்தகத்தைக் காத்துக்கொள்ளும் வகையில் சீனா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாகத் தற்போது சீனா பொருளாதாரத் தாராளமயமாக்கல்-ஐ வலியுறுத்தி தனது வர்த்தகத்தை நகர்த்த முடிவு செய்துள்ளது.
பொருளாதாரத் தாராளமயமாக்கல்
இன்று சீனாவின் ஹைய்நான் பகுதியில் நடந்த வளர்ச்சி குறித்த மாநாட்டில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங்,, வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் வர்த்தகத்தை அனுமதிக்க அரசு முழுமையாகத் தயாராகி வருகிறது என ஜின்பிங், தெரிவித்தார்.
பொருளாதாரத் தாராளமயமாக்கல் மையப்படுத்திய இவரது பேச்சு, பல துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்களுக்குச் சீனாவில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும்.
ஆட்டோமொபைல் துறை
இதுமட்டும் அல்லாமல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியைக் குறைக்கவும், வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அரசு விதித்து வந்த கட்டுப்பாடுகளும் அதிகளவில் தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் ஜின்பிங், தெரிவித்தார்.
டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவின் ஒவ்வொரு அறிவிப்புக்கும் சீனா தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 100 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தின் மீது வரி விதிக்கப்படும் எனச் சீனாவை எச்சரித்தார்.
இதற்கு எதிராகவே சீனா அதிபர் புதிய வர்த்தக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
150 பில்லியன் டாலர்
ஏற்கனவே அமெரிக்க அரசு சீனா வர்த்தகத்தின் மீது சுமார் 50 பில்லியன் டாலர் அளவிலான வரி விதிப்பை அறிவித்துள்ள நிலையில் புதிதாக 100 பில்லியன் டாலர் வரி விதிப்பை அறிவிக்க எச்சரித்துள்ளது.
இதன் மூலம் அமெரிக்கா சீனா இடையில் சுமார் 150 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகம் பாதிக்கும்.
புதிய திட்டங்கள்
இரு நாடுகளும் இறக்குமதி பொருட்கள் மீது அதிகளவிலான வரியை விதித்துள்ள நிலையில், தற்போது அமெரிக்க அரசு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் பேனல்கள் மீது வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளது.
இறக்குமதி வாகனங்கள்
2017 நவம்பர் மாதம் முதல் சீன அரசு இறக்குமதி வாகனங்கள் மீதான வரியை குறைத்து வரும் நிலையில் ஜின்பிங், அறிவித்துள்ள கூடுதல் வரிக் குறைப்பின் மூலம் ஆட்டோமொபைல் துறையில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.
டெஸ்லா
சில மாதங்களுக்கு முன்பாக அமெரிக்காவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாகத் திகழும் டெஸ்லா சீனாவில் புதிதாக உற்பத்தி ஆலையை அமைத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications