உலகமே கொரோனாவால் முடங்கிய நிலையில், கடுமையான கட்டுப்பாடுகளோடு வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்திப் பிற நாடுகளை விடவும் முன்கூடியே தனது வர்த்தகச் சந்தையைத் திறந்து பொருளாதாரத்தை மீட்டது சீனா. இந்த மோசமான 2020 ஆண்டிலும் சீனாவின் முன்னணி பணக்காரர்களின் சொத்து மதிப்பு சுமார் 1.5 டிரில்லியன் டாலர் அளவில் உயர்ந்துள்ளது.
சீனாவின் டாப் பணக்காரர்களின் சொத்து மதிப்பில் கடந்த 5 வருடத்தில் ஏற்பட்ட மொத்த வளர்ச்சியையும் சேர்த்தால் கூட 2020ஆம் ஆண்டின் 1.5 டிரில்லியன் டாலர் இல்லை என்பது தான் கூடுதல் சிறப்பு. கொரோனாவால் மொத்த உலக நாடுகளும் மோசமான நிலையை எதிர்கொண்டு இருக்கும் அதே வேளையில், சீனா பட்டையைக் கிளப்பி வருகிறது.
கொரோனா எதிரொலியாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாகச் சீனாவில் 2020ஆம் ஆண்டில் ஈகாமர்ஸ் மற்றும் கேமிங் துறை மிகப்பெரிய வளர்ச்சியை எதிர்கொண்டுள்ளது.
சீனா பணக்காரர்கள்
லாக்டவுன் காரணமாக இந்தியாவைப் போலவே சீனாவிலும் டிஜிட்டல் சேவைகள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. எப்போதும் இல்லாத வகையில் மிகவும் குறுகிய காலகட்டத்தில் சீனாவில் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாகச் சீன பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக 257 பேர் இந்த ஒரு வருடத்தில் சேர்ந்துள்ளனர்.
அமெரிக்கா- சீனா
ஹூரன் வெளியிட்டுள்ள சீன பணக்காரர்கள் பற்றிய அறிக்கையில், அமெரிக்காவில் 626 பில்லியனர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், உலகின் 2வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் சீனாவில் 878 பில்லியனர்கள் இருப்பதாக அறிவித்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் சுமார் 2000 சீனர்கள் சுமார் 2 பில்லியன் யுவான் அதாவது 300 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை வைத்துள்ளனர். இந்த 2000 பேரின் மொத்த சொத்து மதிப்பு 4 டிரில்லியன் டாலர் என்பது கூடுதல் தகவல்.
ஜாக் மா
அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவருமான ஜாக் மா-வின் சொத்து மதிப்பு கடந்த வருடம் பெரிய அளவில் சரிந்த நிலையில், இந்த வருடம் லாக்டவுன் காரணமாகச் சீன ஈகாமர்ஸ் சந்தையில் ஏற்பட்ட மாபெரும் வளர்ச்சி இவரின் சொத்து மதிப்பு 45 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதனால் ஜாக் மாவின் சொத்து மதிப்பு 58.8 பில்லியன் டாலராக உயர்ந்து சீன பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
போனி மா
இவரைத் தொடர்ந்து உலகின் மிகப்பெரிய கேமிங் மற்றும் குறுஞ்செய்தி சேவை நிறுவனமான சென்சென்ட் நிறுவனத்தின் தலைவரான போனி மா-வின் சொத்து மதிப்பு இந்த வருடம் 50 சதவீதம் வளர்ச்சி அடைந்து 57.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
3வது இடம்
முதல் முறையாகத் தண்ணீர் பாட்டில் விற்பனையாளரான Zhong Shanshan 53.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது தண்ணீர் பாட்டில் நிறுவனமான Nongfu ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில், இவரது சொத்து மதிப்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு
2020ஆம் ஆண்டின் 3வது காலாண்டு அதாவது செப்டம்பர் காலாண்டில் சீனா பொருளாதாரம் 4.9 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. ஆனாலும் இன்னமும் சீனா இளைஞர்களும் பட்டதாரிகளும் வேலைவாய்ப்பு பெற முடியாமல் தவித்து வருவதாக ஹூரன் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் சீனாவின் நகரப்புற வேலைவாய்ப்பின்மை செப்டம்பர் மாதத்தில் 5.4 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications